Aug 4, 2010

இது தான் காதல் என்பதா?

வசை நீ பாடும் போதும்
இசை பாடுவதாய்
கேட்பது தான் காதலா?

உன் மடல் வந்து சேரும் போது
கடல் வந்து தாலாட்டுவதாய்
உணர்தல் தான் காதலா?

ரோட்டில் நீ நடந்துபோகும் போது
நாட்டில் இவள் மட்டும் தான் அழகென்று
எண்ணல் தான் காதலா?

படிக்காமல் கல்லூரிக்கு நான் வந்தால்
படித்து நீ சொல்லிக்கொடுப்பதும்
காதலா?

கண்ணில் நீ பட்டுவிட்டால்
விண்ணில் நான் பறப்பதும்
காதலா?

Jul 30, 2010

முக்கனியே

மனங்கவர்ந்த "மா" வே
உன் காதல் "பலா" தான் எனக்கு
வாழையடி வாழையாய் வாழ
"வாழை" யாய் வருவாயா?

Jul 28, 2010

நட்பின் பிரிவு - 2

கூடவே இருந்தோம்
கூடவே இருப்போமுனு
கூடியே யோசிச்சோமே பலமுறை -இப்படி
கூடவே கிடச்சதே வேலை வெவ்வேறு திசையில...

கூடவே முடியாம தவிக்கிறோமே
கூடி வரும் நம்ம திருமணத்துக்குக் கூட...

காலம் கூடி வராதா
என் நண்பன் கூட கூடி மகிழ...

Jul 26, 2010

பட்டமாகிய நான்

பட்டமாய் நான் பறந்தாலும்
கட்டுப்படுத்தும் ஆற்றல் உன் கையில்

என்னை விட்டுவிடாதே
மண்ணைத் தொட்டுவிடுவேன் ...

Jul 23, 2010

கனவிலும் நனவிலும்

கனவில்லா நாளும் இல்லை -அன்பின்
நினைவோடு வாழும் போது...

இரவினில் கனவாய்
பகலினில் நினைவாய் நீ தான்...

தேடித் தேடி வந்தாலும்
ஓடி ஓடி ஒழிந்து கொள்வாயே -ஆனால்
நாடி நாடி வருகிறாயே கனவில் மட்டும்

தூக்கத்திலும் கூடவே இருப்பேன் என்றாயே
சுவாசிக்கும் ஆக்ஸிஜனும் நீ தானா?

Jul 19, 2010

உன் வெட்கத்தை இரசிக்க பக்கத்தில் வரவா?

பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் திளைக்கிறாயே
ஓரப் பார்வையில் ஒழிந்து என்னைப் பார்க்கும் போது
தீரா ஏக்கத்தில் திக்குமுக்காடி நிற்கிறேன்

மறைந்து நீ பார்த்தாலும்
மறக்காமல் நீ அனுப்பும் புன்னகைச் செய்தி
மறை போட்டு இறுக்கியதாய்
மனதில் பதித்துவிட்டாய்

போய் வருகிறேன் என்று நான் சொல்ல நீ
சேய் போல் தவிப்பதை என்னால்
தாங்க முடியவில்லை என்
தங்க நிறத்தழகியே...

Jul 15, 2010

அந்த நாட்களை ஒருமுறை நினைக்கட்டுமா?

பாவையர்கள் பல்லாங்குழியாட
காளையர்கள் கபடியாடிய காலம்
பசுமரமாய் நிற்குதே நெஞ்சமெல்லாம்...

மங்கும் நேரத்தில் ஆடிய கள்ளன் போலீஸில்
எங்கு போய் ஒழிந்தான் இவனென்று
ஓடி ஆடித் தேடிய நினைவுகள்
ஒழியாமல் வருதே...

மங்காத்தாள் ஆடியது
எங்காத்தாளுக்கு தெரியவர
அத மறக்க அவ போட்ட சூட்ட
மேலோகம் போனாலும்
எப்படித்தான் மறப்பது...

வெட்டியாக இருக்கும் போது
போட்டி போட்டு விளையாண்ட
கிட்டி விளையாட்டு கூட
எப்படி இருக்கும் தெரியும்மா?...

விடுமுறை நாளில் குளிக்க போனால்
கண்மாயில குதியாட்டம் போட்டுத் குளித்தவனுக்கு
சவருல குளிக்கும் சந்தனக்குளியல் கூட
சாக்கடைக் குளியல் தானே...

Jul 13, 2010

கல்விக் கடை

புற்றீசலாய் கல்லூரிகள் உதிப்பதும்
பெருமை தான் -ஆனால்

கட்டமைப்பற்ற கல்லூரிகள்
கட்டுக்கடங்காமல் உதிப்பது
சிறுமை தான் பெருமை அல்லவே...

கல்லூரியைக் கடையாக்கி
கலந்தாய்வில் விற்பனையா
கல்லூரி இடங்கள்
இன்றைய கல்விமுறையில்...

ஆயிரங்கூடங்கள் கூட முளைக்கட்டும்
அத்தனையிலும் கட்டமைப்பு வசதி இருந்தால்...

அன்று படித்தவன் ஆரம்பித்தான் கல்விக்கூடம்
இன்று மக்கள் பணத்தைச் சுருட்டியவன்
ஆரம்பிக்கிறான் கல்வியென்ற வியாபாரக்கூடம்...

ஊருக்கு நூறு கல்லூரிகள்
பேருக்கு ஓரிரு தொழிற்சாலைகள் ஆங்காங்கே
இந்த நிலை எப்பொழுது மாறும் என் தாயகத்தில்?

Jul 12, 2010

துடிக்கிறேன்...

செல்லம் செல்லம் என்று
என் செவிகுளிரச் சொல்லும் போது
பள்ளத்தை நோக்கி ஓடும் நீராய்
உன் பக்கத்தில் வரத்துடிக்கிறேன்

அன்பே அன்பே என்று
ஆசையாய்ச் சொல்லும் போது
உன் அருகில் வந்து அணைக்கத் துடிக்கிறேன்

கண்ணே கண்ணே என்று
என் கண் குளிரச் சொல்லும் போது
உன் கண்ணுக்குள் உள்ள நிலவை
கலங்காமல் காக்கத் துடிக்கிறேன்

மாமா மாமா என்று
என் மனங்குளிரச் சொல்லும் போது
உன் மடியில் சாய்ந்து
மனசாரத் தூங்கத் துடிக்கிறேன்

Jul 8, 2010

அபுதாபியில் ஓர் அழகர்சாமி

படித்தது நம்நாட்டில் இலவசமாய்
பார்ப்பது வேலை
பக்கத்து நாட்டில் பரதேசியாய்...

முடிந்தவரை முயன்றும்
குடும்பத்தைக் காக்க
முடியாமல் பரதேசம் செல்பவரே
அதிகம் இல்லையா?

பத்தாம் தேதிக்குள்ள நான் அனுப்புன
பத்தாயிரம் ரூபாய
கடன் காரனுக்கு வட்டியோட
கொடுத்துட்டேன்டானு
எங்காத்தா சொல்லும் போது
ஆனந்தக் கண்ணீர் வந்து
அரை ட்ரவுசரையும் நனைச்சுடுச்சே!!!

குடும்பத்தில் உள்ளவர்கள்
படும் பாட்டைப் பார்த்து
பரதேசம் போக நினைப்பது தவறா?

தாய் மாமனுக்கு எங்கக்கா கூட
வெ.அழகர்சாமி துபாய் அபுதாபினு
போடுறதும் என் தவறா?

நேசித்தவர்களைக் காக்க
யோசித்தால் விடை
பரதேசம் தானே...

வேம்பின் மகத்துவம்

உன் நிழல் தவிர
அத்தனையும் கசப்பு தான் -ஆனால்
மனிதனுக்கோ கசப்பான இனிப்பு தான்

பட்டை முதல் கொட்டை வரை
பயனாய்ப் படுகிறாயே

அரைத்த உன் இலையை
அங்கமெல்லாம் தடவினால்
சொறியும் சிரங்கும் நெருங்குமோ?

உத்திராட்டாதி கதிர்களை ஒடுக்க
உன் சக்திக்கு நிகருமுண்டோ
இவ்வுலகில்?

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே
ஆலும் வேலும் பல்லுக்குறுதினு
சொன்னவன் நம்மவன்
இதற்கு காப்புரிமை பெறத் துடிப்பவன் அமெரிக்கனா?

Jul 6, 2010

காத்திருக்கும் காளிமுத்து

நகருக்குப் புறம் போகக் காத்திருந்தால்
புறநகரப் பேருந்து வந்துவிடும்
அவளுக்கு அகம் போகக் காத்திருக்கேன்
எப்பேருந்தென்று தெரியாமல்...

அடேய் காளி உன் சோலியைப் பார்
இல்லையென்றால் நீ காலி என்கிறாளே
அவளுடன் தாலி வரை சிந்தித்துவிட்டேன்

என்னைப் பிடிக்கும் வரை காத்திருக்கேன்
பிடிக்காது என்று மட்டும் சொல்லாதே...

Jul 5, 2010

நிகழ் கால நிம்மதி

கனவு நனவாகுமானு என்னுள்
வினவிய காலம்

கண்டிப்பாக இலக்கை அடைவாய்னு
புதுத்தெம்பைப் பாய்ச்சிய காலம்

நம்பி உழைத்தும் முடிவில்
வெம்பி அழுத காலம்

படியேறி வேலை கேட்டும்
படு முட்டாள்னு முத்திரை குத்திய காலம்

அடுத்தவன் மரத்தில் நுங்கு திருடி
மாட்டிக்கொண்டு நொங்கு வாங்கிய காலம்

இயல்பாய் இருந்தவனையும் அவள் உன்னைத்தான்
பார்கிறாள்னு என் நண்பன் ஏத்திவிட்ட காலம்

நிகழ் கால நிம்மதியே
சோகங்கள் நிறைந்த இறந்த காலத்தையும்
எண்ணி மகிழ்வது தான் அல்லவோ?

Jul 2, 2010

தோணியோட்டியின் காதல்

துடுப்பால் நான் ஓட்டும் தோணி கூட
கடுப்பில் இருக்குதே
விடுப்பில் இருக்கும் உன்னைப் பார்க்காமல்...

பட்டும் படாது பார்த்துச் செல்லும்
உன் பார்வையால்
விட்டு விட்டுத் துடிக்கும் என் இதயமே
வெடிக்கும் போல் இருக்கே...

மாலைக் கதிரவனும் மங்காமல் காத்திருக்கே
பாவாடை தாவணியில் பாவை ஒருத்தி
என் தோணியில் பயணிக்க...

Jul 1, 2010

சிலைக்கு ஒரு வலை

சிற்பம் கூட பேசும் காலம்
சொற்பம் தான்
ஆனால் அதை அழியாமல்
மனக்காட்சியகத்தில்
மறக்காமல் சேமித்துள்ளேன் ஒவ்வொரு
வார்த்தையாக...

மானே உன்னைத்தேடி அலைந்து
மாமன் என்னைத் தொலைத்துவிட்டேன்...

மயிலே உன் அழகில் மயங்கி
தயங்காமல் சொல்லிவிட்டேன்
என் விருப்பத்தை...

சரி என்று ஒரு வார்த்தை சொன்னால்
மாரி போல் குளிர்விக்க
மச்சான் நானிருக்கேன் உனக்காக...

Jun 29, 2010

கோபம் வரும் நேரம்

ஒன்றாக வந்தோம்
இரண்டாகச் சென்றோம்
இடையில் வந்த இந்த வெட்டிக் கோபத்தால்...

அன்பில் அன்னைக்கு மேல் என்போம்
ஆருயிர் என்று கூட
சொல்வோம்...
சினம் சிந்தையில் ஏறும் வரை...

சிறு கனம் யோசிக்கத் தவறி வரும் சினத்தால்
மனம் பெரும் பாடாய்ப் படுகிறதே...

கோபம் வரும் நேரம் மட்டும்
அமைதி மருந்தை
அந்த இடத்தில் தடவி விட்டால்
எந்த இடம் சென்றாலும் நமக்குச் சிறப்பு தானே!!!

Jun 28, 2010

செப்பனிட நான் வரவா?

வானம் மங்கிய மாலையில்
என் மனம் மயக்க
ஒரு கனம் வந்த
இந்த சோலை
யாரம்மா?

நான் நலம் தான் உன்னை
பார்க்கும் முன் வரை...
நீ எப்படி அங்கு?

எனக்கு உன் உலமான
முகமும் அன்புக் களமாய்
தெரியுதம்மா?

உன் எண்ணத்தில் என்னால்
ஒரு சலனமென்றால்
அதைச் செப்பனிட நான் வரவா?

Jun 24, 2010

ஒருமுறை

உன்னை நிலா என்று வருணிக்க மாட்டேன்.
நிலாவும் தன் உடலை மாதம் ஒருமுறை
மறக்காமல் மறைக்குதே...

ஒருமுறை உன்னைக் காணாவிட்டால்
மறுமுறை துடிக்குமா என் இதயம்
என்றே தெரியவில்லை...

உனக்காக காத்திருக்கும் நேரத்தில்
ஒருமுறை கொள்ளுப் பேத்தி பேரன்
வரை கண்டுவிட்டேன் கனவாக...

ஏதோ கடற்கரையாம், அலையாம்,
மணலாம்,சுண்டலாம்
இதையெல்லாம் ஒருமுறையாவது
பார்ப்போமா?

Jun 23, 2010

தேனீ

மொட்டுக்களும் பூவாகுது
பூக்களும் காயாகுது
காய்களும் கனியாகுது
உங்களின் மன்மத மகரந்தச் சேர்க்கையால்...

மலர்களுக்கு மகரந்தம்
மனிதர்களுக்கு ஓர் ஆனந்தம்

தேனிலும் இனிமை
கண்டதுண்டா மானிடர்
எவரும் இவ்வுலகில் ?

ஒற்றுமைக்கு ஓர் உறைவிடமாய்
கூட்டுகுடும்ப வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாய்
உள்ள நீங்கள்
மனிதர்களுக்கு
ஓர் உன்னதமான உதாரணமல்லவா?

Jun 22, 2010

அம்(ன்)பு

பக்குவமாய் ஏவிய
உன் அம்(ன்)பு
மலர் தூவிய
மெத்தைபோல் நறுமணம் கமலுதடி...

நீ விளைவித்த பாசம்
விலையில்லா வைரமாய்
மின்னுதடி...

உன் வலையில்
மாட்டிய மீனாய்
என்றும் உனக்கு மட்டும்
சொந்தமாய் நானிருக்க
விழைகிறேனடி...

என் தலையே
போகும் சூழலிலும்
கலை என்று உன் பெயர் சொல்லி
மடிவேனடி...

Jun 21, 2010

கண்மொழி

உன் கண்ணைப் பார்த்த உடனே
என் கண்களும் போட்டனவே
வாயிக்கு கடிவாளம்!
கண்மொழி பேச
நாங்கள் இருக்க
உங்கள் வாய்மொழி எதற்கென்று...

Jun 18, 2010

கைமாறு

உறவினிலே ஒர் உன்னதமாய்
அன்பினிலே ஓர் மரகதமாய்
உன்னைப் பெற்றேன் நான்
என்னாத்தா கைமாறு செய்வேன்
என்னைப் பெற்றெடுத்த உனக்கு

சித்தெறும்பு என்னைக் கடித்தால் கூட
நாகப்பாம்பு கடித்த வலியை
நீ உணர்வாயே ஆத்தா...

கனமான கஞ்சிக்களையம்
நீ சுமந்து வந்தாலும்
கடைசிவரைப் பட்டினியாய் நீ இருப்பாயே
ஆத்தா...

பட்டணம் போய் நான் படிக்க நீ
பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா ஆத்தா?

கண் முழிச்சு நான் படிக்க
கடுங்காப்பிய போட்டு போட்டு
நீ தருவாயே ஆத்தா

என்னாத்தா கைமாறு செய்வேன்
என்னைப் பெற்றெடுத்த உனக்கு...

Jun 17, 2010

என் அருமைப் புத்தகமே

நீயே கதி என்று கிடந்தேன்
என் பள்ளிக் காலத்தில்...
உன்னைத் தொட்டால் எனக்கு
தூக்கம் தான் வருகிறது இப்பொழுது...
அறிவைப் புகட்டிய நீ
எப்படி தூக்க மாத்திரையாய்
மாறினாய்?
வழி சொல்லு எனக்கு
மீண்டும் உன்னை இரசிக்க!!!

Jun 16, 2010

நடைபாதைப் பயணம்

எத்தனை எத்தனை புதுமுகங்கள்
எத்தனை எத்தனை மாற்றங்கள்
இந்த நடை பாதைப் பயணத்திலே...

பார்த்து பல வருடம் ஆனவரை
நீங்கள் அவர் தானே என்று
ஞாபகப்படுத்தி விட்டால்
மகிழ்ச்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும்
முடியுமா?

வயதான காலத்தில்
வயிறு கழுவப் பிச்சை எடுக்கும்
சாலையோர உடன் பிறப்புக்கு
ஒரு ரூபாய் போட்டால் கூட
உள்ளார என்னவொரு திருப்தி...

தினமும் நடக்கும்
இந்த முப்பது நிமிடங்களில்
விடையும் கிடைத்துவிடும்
பல விடை தெரியாத பிரச்சனைகளுக்கும்...

நடந்து போகும் பலரையும்
நல்ல நண்பராக்கியதே இந்த
நடைபாதைப் பயணம்...

Jun 15, 2010

உனக்கு ஒன்று என்றால்?

வெள்ளி முத்தே நீ என்னுள்
பள்ளி கொண்ட
சொத்தாகிவிட்டாய்...

என் கண்மணியின் கண் இமையே
உன்னால் முடியாவிட்டால்
சொல்லிவிடு
நான் பார்த்துக்கொள்கிறேன்.

அவள் கண்ணில் விழுந்த
அணுவளவு தூசிக்கும் அளவில்லாமல்
கண்ணீர் பொங்குவது நான் அல்லவோ?

என் தங்கமகளின் தலைமயிரே
உனக்கு சாம்பிராணி காட்டி
மல்லிகையில் மணமாட வைத்தால்
எங்கிருந்தோ பேன்களை
இழுத்து வருகிறாய்.
இது தான் நீ செய்யும் நன்றியா?

பேன் அவளைக் கடிக்க அழுவது
நான் அல்லவோ?

என் கலைவாணியின் காலணியே
கடையில் சுவரில் தொங்கிய உன்னை
விலைகொடுத்து என்னவளுக்கு அர்ப்பணித்தேனே

பிஞ்சு கால்களைக் கடித்து
நஞ்சாய் இருக்கிறாயே...

நீ கடிப்பது அவளைத்தான் ஆனால்
துடிப்பது நான் அல்லவோ?

Jun 14, 2010

உனக்காக

நிலாவும் கூட
தன் முகம் மறைக்குதே
காலையில் உன்முகம்
கண்டவுடன்...

பறவைகளும் கூட
அதிகாலையில் பாட்டு பாட
ஆரம்பித்ததே உன்னை
எழுப்ப...

உன் மாவு அரிசி கோலத்தில்
மயங்கிய எறும்புகளும்
படையாய் நிற்குதே
என் கூட சேர்ந்து உனக்கு
காலை வணக்கம் சொல்ல...

உனக்காக

Jun 11, 2010

நீ செய்த தந்திரம் என்ன?

என்ன தந்திரம் செய்தாய்
என் நித்திரையிலும் உன் முகத்திரையைப்
பதிக்க...

சற்றும் எதிர்பார்க்கவில்லை இப்படி
முற்றிலும் என்னை
ஆக்கிரமிப்பாயென்று...

மனம் திருடப் படையெடுத்து
கனப்பொழுதில் இந்த
வெள்ளந்தியையும்
வெள்ளை கொடி காட்ட
வைத்துவிட்டாயே...

நீ கற்ற நேக்கு போக்குகளை
சாக்கு போக்கு சொல்லாமல்
இன்றாவது சொல்லிவிடு...

Jun 10, 2010

என் மனதில்

நித்தம் நித்தம் உன்
அழைப்புகளுக்கு ஏங்கும்
ஒரு பித்தனாகிவிட்டதை
என் சித்தம் உணர்கிறேன்.

சத்தம் இல்லாத தனிமையிலும்
சத்தமாய் ஓங்கி ஒலிப்பது
உன் குரல் மட்டும் தான் என் மனதில்.

உனக்கு ஒவ்வொரு நாளும்
விடைகொடுக்கும் போதும்
எத்தனை எத்தனை படபடப்புகள்
என் மனதில்...

உன்னுடன் பேசாத நிமிடங்களில்
ஒரு படையே என்னை தாக்கும்
அளவு வலி என் மனதில்...

Jun 9, 2010

அறுபடை வீடு

கரிய உன் கூந்தலில்
அரிய ஒரு பூ வைத்து
வாய் நிறைய ஒரு சிரிப்பு சிரித்து
என் மனதை நிறைய வைத்தாயே
பார்த்த முதல் முறையே...
அன்று தெரியவில்லை நீ
அன்பின் என் அறுபடை வீடென்று!!!

Jun 8, 2010

அகழ்

மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி
என் தூக்கத்தை பாதியாக்கி
மனசுக்குள்ள வீதி உலா செல்கிறாயே

சகலமும் உங்களுக்குத் தானென்று
சலிக்காம நீ சொல்லும் போது
உள்ளுக்குள்ள என்ன வினை நடக்குதுன்னு
எனக்கே தெரியலம்மா

மங்காத அன்பை மட்டும் பொங்கி பொங்கி
என் மேல கொட்டும் போது
மயங்கி கொஞ்சம் சாயட்டுமா
உன் மடியில

எப்ப மாமா வருவீங்கனு எப்பயுமே
நீ கேட்கும் போது
என்ன தான் சொல்றதுன்னு
எனக்கே தெரியலம்மா

கண்டிப்பா வந்து உன் கரம் பிடிச்சு
கலகலப்பா உன்னை
பார்க்கும் போது தான்
என் பாரம் கொஞ்சம் இறங்கும்மா

Jun 7, 2010

ஏன் இந்த மாற்றம்

சத்தம் இல்லாத கைப்பேசியிலும்
அடிக்கடி உன் அழைப்பு சத்தம்
கேட்பதாய் ஓர் உணர்வு...

நீ காலை வணக்கம் சொல்லவே
காலையில் சூரியனும் உதிப்பதாய்
ஓர் எண்ணல்...

ஒற்றை ரோஜாவும் உன் புன்சிரிப்பைக்
காப்பியடித்துத் தன் இதழை
விரிப்பதாய் ஒரு நம்பிக்கை...

வெளியே செல்லும் போது நீ பேசியதின்
விளைவால் தான் இந்த குயிலும் மைனாவும்
உன் குரலில் பாடுவதாய் ஒரு கணிப்பு...
உன்னால் ஏன் இந்த மாற்றம் என்னுள்?

Jun 5, 2010

காதல் ஓவியன்

கண் மூடி கண் திறக்கும் முன்
காதல் வந்தது...
வந்த காதல் வழுவடைந்தது
வங்கக்கடலில் மையங்கொள்ளும்
புயலைப் போல...
காதல் புயலில் சிக்கி இருவரும்
விடாமல் நனைகிறோம்
அன்பென்ற மழையில்...

தினமும் ஒரு மணி நேரமாவது
பேசாவிட்டால்
உலகம் இருண்டதாய்
அவள் உணர்கிறாள்

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது
நினைக்காவிட்டால்
மூளை நரம்பும் சுருண்டதாய்
நான் உணர்கிறேன்

நான் ஒரு விஞ்ஞானியாக
இருந்து இருந்தால்
காதல் அலையின் வேகம்
காணத் துடித்து இருப்பேன்

ஓவியனாய் இருப்பதால்
ஒரு சிறிய காகிதம் கிடைத்தாலும்
அவள் படம் தான் வரைகிறேன்.

Jun 4, 2010

நட்பின் பிரிவு

காலையில் கண் முழித்தவுடன்
காண ஓடி வரும்
சகா அங்கிருக்க
இங்கிருக்கேன் எட்டாத தூரத்தில்...

பாசாங்கு செய்யாத நேசங்களை
விட்டு அந்நிய தேசங்களை
ஆக்கிரமித்தது தவறு தான் தோழனே...

இங்கு இந்த விடியாத நாட்களில்
விடிந்தவுடன் நினைக்க மறக்கவில்லை
உன் நினைவலைகளை...
சீக்கிரம் வந்துவிடுகிறேன் நண்பனே
இன்னும் ஆறே மாதத்தில்...

Jun 3, 2010

சுவாசமே

காற்றில் நீ கலந்ததால்
என் சுவாசமானாய்
அன்பில் நீ விஞ்சியதால்
என் தாயிக்கு நிகரானாய்
என்னை நீ விரும்பியதால்
என்னுள் பாதியாகிறாய்
கண்ணே உன்னை கலங்க விட மாட்டேன்
உன் கண்ணுக்கு இமையாக நானிருப்பதால்...

Jun 2, 2010

பெண் கல்வி

பிஞ்சாய் இருக்கையில்
பொதியாய்ப் பஞ்சு சுமப்பவளே...
கல்ப்பனா தேவியையோ
இல்லை கரண்பேடியையோ
கனவிலும் உன் மனதில் நிறுத்தி
கல்விக்கூடம் வாருமம்மா...
இப்பொழுது வேண்டாம் இந்த
இளமையில் வேலை...

ஆண் படித்தால் குடும்பம் செழிக்கும் -ஆனால்
நீ படித்தால் ஊரே கொழிக்குமம்மா...
வறுமை பற்றி சிறுமை கொள்ளாதே
உனக்காக இலவசங்கள் ஏராளம்
இங்கு நீ படிக்க...
வா தாயே வந்து படித்து
இந்த பூமி பந்தைக் காப்பாற்று...

Jun 1, 2010

குறுந்தகவல்

நீ அனுப்பிய குறுந்தகவல்
என்னைப் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்துப் பறக்க வைக்குதடி...

ஒரு தகவலை ஓராயிரம் தடவை
படித்தாலும் மகிழ்ச்சி மட்டும்
மட்டுப்படவே மாட்டுதடி...

காலமெல்லாம் கடலையில் நாம்
இருந்தாலும் என்னை
எழுப்புவதும் தூங்க வைப்பதும்
நீ அனுப்பும் இரட்டை வார்த்தை
குறுந்தகவல்தானடி...

May 31, 2010

சிகரெட்

மூச்சுக்காற்றை நச்சுக்காற்றாய்
மாற்றிடுவானே
புகைகொடுத்துப் பகைபிடித்துக்
கொள்வானே
கணையம் முதல் கல்லீரல் வரை
இதயம் முதல் நுரையீரல் வரை
அத்தனையும் பாதிக்கும் இவன்
புற்று நோயையும் பற்றோடு கூப்பிட்டு
வருவானே
இவனை ஒழிக்க இன்று முதல் உதவுவோம்
இவன் குடிகொண்ட நம் நண்பர்களுக்கு
இப்புகையிலை ஒழிப்பு தினத்தில்...

May 27, 2010

தொட்டால் சுருங்கி

நான் தொட்டதும்
உன்னை மறைத்தாயே
இப்பொழுது விட்டதும்
என்னை பார்க்கிறாயே
இது என்ன
உனக்கு மட்டும்
இவ்வளவு
விருப்பு கலந்த வெட்கம் என்மேல்...

பச்சைக் கொடி

பகல் கனவா போயிடுமோனு
வெறுமையா நினைக்கும் போது
நீ அனுப்பியக் குறுந்தகவல்
என்னை மகிழ்ச்சிக் கடலில் நீராட வைத்ததடி....

அடிக் கள்ளி
இம்புட்டு ஆசையை
அடக்கி நீயே வச்சுக்கிட்டு என்ன
அலைய விட்டுடேயே
உன்ன சுத்திச் சுத்திக் காதல் பண்ண!

நாத்திகனா இருந்தவன
ஆத்திகனா ஆக்கினேயே
என்ன கோயிலில சுத்தவிட்டு...

நீ மட்டும் பக்கத்தில் இருந்தால்
கட்டியணைச்சு முகத்தில்
ஒன்னு முதல் முறையா கொடுத்திருப்பேன்

ஓடி வாரேன்டி நீ காட்டிய பச்சைக் கொடியை
காதல் கொடினு அறிவிக்க...

May 26, 2010

பஞ்சாயத்து யூனியன் நடு நிலைப்பள்ளி, சத்திரம்புளியங்குளம்

அந்த இடம் சென்றவுடன்
ஏதோ நினைக்கிறது மனது
என்னவென்று யோசிக்கையில்
அகரம் புகுத்திய ஒன்றாம் வகுப்பு
கைத்தறி ஆசிரியர்
பசையாய் ஒட்டியிருக்கிறார் ஆழ்மனதில்...

கல்லூரி பல சென்றும்
பிறகு கம்பெனி பல மாறியும்
மனம் மட்டும் மாறாமல் நினைத்து மகிழுதே
ஆரம்பக் கல்வி புகட்டிய தமிழரசி டீச்சரையும்...
பக்கத்தில் இருந்து பாசம் காட்டிய பாலாமணி டீச்சரையும்...

கணிதத்தில் கலக்கும் கண்ணன் சாரையும்,
அறிவியலை அருமையாகப் புகட்டும் சங்கர் சாரையும்
ஒழுக்கம் உயிரினும் மேல் என்று எனக்கு உணர்த்திய
தலைமை ஆசிரியர் போஸ் சாரையும்...
எண்ணாத நாளும் உண்டோ
அந்த இடம் சென்று விட்டால்?

May 25, 2010

அறை எண் 610ல் அன்பரசி

கவலையும் விலை போயிடும்
கடைசி வரை என் இதயத்தின்
ஆரிக்கிளில் அறை எடுத்து நீ தங்கினால்...

தோல்வியும் வெற்றிடமாகிடும்
இருக்கும் வரை என் இதயத்தின்
வென்ரிக்கிளில் உரிமம் எடுத்து நீ உறங்கினால்...

May 24, 2010

உன் நினைவுகள்

உன் நினைவுகள்
என்னைப் பாதிக்கிறது பகலெல்லாம்
என் தூக்கத்தை சோதிக்கிறது இரவெல்லாம்...

உன்னை விட்டுப் பிரிந்த நாட்கள் விடாமல்
துரத்துதே வெகு தொலைவில் நானிருந்தும்...

உன்னையே உலகமென நினத்து வாழ்ந்த
என்னை இவ்வுலகத்தில் தவிக்க விட்டுப் போக
உனக்கெப்படி வந்தது மனம்...

தொட்டு அணைக்க ஆசைப் பட்டேன்
இப்படி உன்னைக் கடைசியாய்க்
கட்டி அணைத்து அழுவேனென்று
கடுகளவும் நினைக்கலேயே...

தனியாய் அழுகிறேன் தனிமையில்
உன் கட்டுக் கட்டான நினைவுகளுடன்...

May 20, 2010

இரட்டை வேடம்

நண்பன் என்றால் நேசிக்கிறோம்
மனைவி என்றால் யோசிக்கிறோம்
வேறொரு சாதியாக வந்தால்...

இந்த இரட்டை வேடம்
அணிந்து இம்மையில் வாழ்கிறோமே...

கடவுள் ஒன்று உண்டு என்றால்
அவர் இதைச் சரி என்றும் சொல்வாரா?

தவறு என்று தெரிந்துமே
தவறாமல் கடைபிடிக்கும் இப்பழக்கத்தை
வேரறுக்க வேண்டாமா நாமாவது?

மாற்றம் வரும் வரும் என்று நாம்
மாறாமல் இருந்தால் மாறிவிடுமோ?

மாறுவோம் மாற்றிடுவோம் என்று
சூழுரைக்க வாருங்கள் தோழர்களே!!!

May 19, 2010

நீயூட்டனின் மூன்றாம் விதி

இமைகளால் சிறைபிடித்து உன்
இளமையால் என்னைக் கட்டி
இழுக்கிறாயே....

நீயூட்டனின் மூன்றாம் விதிப்படி
அன்பு காட்ட நீ இருக்க
ஆப்பு வைக்க உன் தந்தை இருக்கார்...

காசு சுண்டி பார்ப்போமா இவ்விதி
மெய்யாகுதா இல்லை பொய்யாகுதானு?

எழிலரசி

விரயமென்று நினைக்கவில்லை நீ
மறையும் வரை என் கண் உன்னைப் பின்
தொடர்வதை -ஆனால்
நரையும் நிலையை நீ அடைந்தாலும்
இந்தக் குறையாத உன் புன்னகையை
எனக்குத் தருவாயா?

மரையும் இவனுக்கு கழன்றதோ
என்று ஏளனம் செய்கின்றனர்
என் சுற்றத்தினர்
வெறுமை இல்லாத உன் உறவை
இவர்களுக்கு நீயே விளங்க வைப்பாயா
என் எழிலரசியே?

May 18, 2010

அவள் தேடும் இவன்

கட்டுக்கடங்கா காளைகளே
என்னைத் தொட்டு அடக்க வாருங்கடா
காதல் என்ற ஜல்லிக்கட்டில்...

நானும் தேடுகிறேன்
சூழ்நிலையால் தொலைந்திடாத
சூரனை மட்டும்...

என்னை விட்டுப் பிரியாத
மனம் உனக்கிருந்தால்
என் தோள் கொடுத்துத் தாலாட்ட
நானிருக்கேன் நம் கனவிலும் கூட...

எனக்கு அதிகம் சம்பாதிப்பவன்
தேவையில்லை
சம்பாதித்ததைக் "குடி" நீரில்
கரைத்துவிடாமல் நீ இருந்தால் போதும்...

முழு நேரமும் அன்பைக் காட்ட நானிருக்கேன்
ஊதியத்தில் பாதியை
ஊதித் தள்ளாமல் நீ இருந்தால்...

May 17, 2010

அட்சய திருதியை

தன் அவலை கிருஷ்ணனுக்கு கொடுத்ததால்
குசேலன் குபேரன் ஆனானாம் அன்று.

இன்று ஒரு கிராமாவது தங்கம் வாங்க
பழைய பத்து கிராமை
அடகு வைக்கிறான்
ஆறறிவு படத்த அறிவுஜீவி ஒன்று.

இன்று குன்றிமணியளவு நகை வாங்கினால்
வருடம் முழுவதும் குன்றாமல் பெருகுமாம்...
மானிடா உன் மனநலம் மட்டும் தான் குன்றிப்போகும்
கடன் தொல்லையால்...
இதை என்று உணர்வாயடா...

திருமகளின் ஐஸ்வர்யலட்சுமியும், தான்ய லட்சுமியும்
தோன்றிய இந்நாளில் உன் மூளையை
சலவை செய்து ஒரு மூலையில் போடலாமா?

பக்தியை வியாபாரமாக்கி
பாமரனை பழியாக்கும்
இச்செயலைப் படித்தவனும் செய்கிறானே
பகுத்தறிவு இல்லாமல்...

சொன்னால் இம்ம்... கடவுள் உஷ்!!!
என்கிறான் பட்டம் பல பெற்றவனும்...

என்று ஒழியும் இந்த அட்சய திருட்டு...

May 14, 2010

உள்ளே - வெளியே

உன் வீட்டு மாடியில் தங்கி பஞ்சம்
பிழைக்க வந்த எனக்கு
உன் நெஞ்சங்கூட்டில்
தஞ்சம் கொடுத்த
என் மஞ்சள் நிறத்தழகியே...

உன் பஞ்சு மனசால்
என்னைச் சிறைபிடித்து அதன்
உள்ளே தள்ளி விட்டாயே...

என்னை நல்லவன் என்று நம்பும்
உன் தந்தைக்குத் தெரிந்தால்
என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி விடுவாரே...

செல்கிறேன் அன்பே
சேய் மனதில் குடியேறும் முன் முதலில் உன்
தாய் மனதில் இடம்பிடிக்க...

May 13, 2010

காகமாய்

வண்ண மலரே உன் சிரிப்பில்
விழுந்த
கன்னக் குழியில் பல்லாங்குழி
விளையாடுகிறேன்
பகலெல்லாம் உன் நினைவால்...

கண்ணின் இமையும் தன் கடமையைச்
செய்ய மறக்குதே கண்ணே உன்னைக் கண்டவுடன்...

பாட்டி சுட்ட வடைக்கு பதுங்கி இருக்கும் காகமாய்
உன் மனதை திருட
காத்திருந்தேன் காலமெல்லாம்
திருடு போன என் மனதுடன்...

விடை கிடைக்குமென்று வீற்றிருக்கேன்
உன் கல்லூரிச் சாலையில் - ஆனால்
கிடைத்ததோ பிரியா விடை தான்
என் அலுவலகத்தில்...

வேலையிழந்து சாலையில் நின்றாலும்
எனக்கு மாமலையும் ஒரு கடுகுதான்
உன்னை அடைந்துவிட்டால்...

May 12, 2010

சுமை தாங்கி

விண்ணோடு விளையாடிய நம்மை
கண்ணால் கூட பார்க்க முடியாமல் இந்த
மண்ணை விட்டே துரத்தியதே
பணம் என்னும் பாதாளம்..

தங்கையின் திருமணச் சுமை தாழிட்டது
தம்பியின் படிப்பு வேலி போட்டது
தந்தையின் உடல்நலம் என்னை
கட்டிப் போட்டது உன்னை விட்டு போக...
இப்பொழுது அக்காவும் வந்து விட்டாள்
அவள் மகளுக்கு காதுகுத்தென்று...

வேலை போக பகுதி நேரத்திலும்
பம்பரமாய் சுற்றி
எப்படியோ சமாளித்து விட்டேன்
ஒவ்வொரு சுமையாய்...

சுமைகளை இறக்கிய மகிழ்ச்சியை
சுகமாய் அவளுடன் மகிழ
நெருங்கிய எனக்கு
போட்டு விட்டாள் ஒரு பாராங்கல்லை
என் தலையில் -அது
அவளுக்கு வேரொருவனுடன்
நிச்சயதார்த்தம் என்று...

தங்கச்சாமி என்று பெயர் வைத்த என் தந்தை
"சுமை தாங்கும் சாமி" என பெயர் வைக்க
மறந்து விட்டாரே!!!

May 11, 2010

ஏக்கம்

உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரியலேயே
ஏன் இந்த ஏக்கம் என்று...

சில பேர் சொல்லுறாங்க
அது தான் கவலையென்று..

மகிழ்ச்சியான வாழ்க்கையிலும் மிச்சமாய்
இருப்பது ஒருவகை ஏக்கம் தானே...

இன்னும் சில பேரோ அதை
ஆசையினும் சொல்கிறாங்க..

திரைகடல் ஓடி திரவியம் தேடி
ஆசயெல்லாம் நிவர்த்தி செஞ்சாலும்
இறங்காம் இருக்குதே இந்த
ஏக்கம் மட்டும்...

நம் மனசு எத நெனச்சு ஏங்குதுன்னு
எவருக்குமே தெரியலையே...

விவரம் தெரிஞ்ச யாராவது விளக்கி
கொஞ்சம் சொல்லுங்களேன்
ஏன் இந்த ஏக்கமுன்னு?

May 9, 2010

மனதை உயிலாய்

முல்லைப் பூவை முதலில்
கண்டேன் திருமுல்லைவாயிலில்
பார்வையம்பை பக்குவமாய் ஏவிவிட்டு
மேகமாய் செல்கிறாளே..
அவள் மீது மோகமாய் தவிக்கிறேன்
என் கனவிலும் கூட...
அன்றோ காற்றில் ஆடிய முல்லைக்கு தன்
தேர் தந்தான் பாரி
இன்றோ என் மனதை உயிலாய் அவள் பெயரில்
மாற்றிவிட்டேன்
இவ்வுயிலை ஏற்பாளா இல்லை
மனநிலை காப்பகத்திற்கு அளிப்பாளா
என்பது அவள் கையில்...

May 7, 2010

கிராமங்களின் நிலை

பட்டுப்போன பனை மரமாய்
நீரின்றி
கண்ணுள்ள குருடர்களாய்
ஒளியின்றி
காலுள்ள நொன்டிகளாய்
சாலையின்றி
பள்ளியிருந்தும் முட்டாளாய்
வாத்தியாரின்றி
இருக்கும் எங்களுக்கு எதற்கு "இலவச கலர் டிவி"
சோற்றுக்கு ஒரு ரூபாய் அரிசி இருக்கு
கொழம்புக்கு முப்பது ரூபாய் வேண்டி இருக்கு...
இந்த நிலை எப்பொழுது மாறும் என்
இந்தியாவின் முதுகெலும்பில்...

May 6, 2010

மரண ராணி

என்னை காதலிக்கும் பொழுது
தேனே நிலவே என்று வருணித்தாயே
இப்பொழுது நீ
தேனிலவு செல்கிறாயே
உன் மாமன் மகளுடன்
நாம் ஊர் சுற்றிய மாமல்லபுரத்திற்க்கே...

என் கையில் பணமிருந்தால்
உன்னை பன்னீரில் குளிப்பாட்டுவேன்
என்றாயே அன்றொருநாள்
இன்று உன்னால் கண்ணீரில் நனைகிறேன்

நமக்கு மட்டும் திருமணம் நடந்தால்
உன்னை மகாராணிபோல் வைத்திருப்பேன் என்றாயே
இன்று உன்னால் மரண ராணியாகிறேன்

உனக்கொரு மகள் பிறந்தால்
மறந்தும் என் பெயர் வைக்காதே
பின்னொரு நாளில் உன்னைப்போல்
இன்னொருவன் அவளையும் கொல்ல...

May 5, 2010

மென்மை

ரோஜாவின் பூவிதழும் மென்மை தான்
பூங்கொடியை தொட்டுப் பார்க்காத வரை
தென்றலும் என்னை சுடுகிறதே
அவளின் வரவைக் காணாத வரை
வானவில்லின் ஏழு வண்ணமும்
அழகு தான்
அவளின் கண்ணின் மையின்
அழகைக் கண்கூடாக் காணாத வரை
ஒளியின் வேகம் தெரியவில்லை அவள்
விழியின் வேகம் என்னை தாக்கும் வரை

May 4, 2010

உழைப்பாளர் தினம்

உழைத்து உழைத்து தளர்ந்த
உடம்பு கேட்டது "ஓய்வு" என்றால் என்னவென்று?
நடந்து நடந்து தேய்ந்த
பாதங்கள் கேட்டது "செருப்பு" என்றால் என்னவென்று?
அல்லும் பகலும் தூக்கமின்றி உழைத்த
கண்கள் கேட்டது "தூக்கம்" என்றால் என்னவென்று?
இப்படி கோடான கோடி மக்களின்
வியர்வைக்கு விடைகொடுக்கும்
அந்த ஒருநாள் தான் உழைப்பாளர் தினமோ?

May 3, 2010

நெஞ்சிலிருந்து நீங்குமா?

தனிமையில் தாழிட்டு கிடக்கும்
என் மனது ஏங்குது
நம்மூர் வயல் வெளியின்
நீர் பாயும் இரட்டை வரப்பில்
தினமும் ஒரு முறையாவது ஏறி
விளையாடவும்..
கரையில் அமர்ந்து கண்மாயின் சுற்றளவை
கண்ணிமையால் கணக்கு பண்ணவும்..
ஆலமர விழுதை ஊஞ்சலாய் மாற்றி
என் பள்ளி மாணவர்களுடன் துள்ளி
தூளியாடவும்..
ஏங்குது என் மனது ...

Apr 30, 2010

ஆசை நிராசையாய்

குறட்டை விட்டு தூங்க ஆசை
இரவிலும் வேலை பார்த்த பொழுது
சோறுக்கு ஆசை கூழ் குடித்து
உயிர் வாழ்ந்த பொழுது
கட்டிலுக்கு ஆசை கட்டாந்தரையில்
தூங்கிய பொழுது
செருப்புக்கு ஆசை முள்தரையில்
வெறுங்காலில் நடந்த பொழுது
புது சட்டை போட ஆசை
கந்தலில் காலம் கழித்த பொழுது
சொந்த வீட்டிற்கு ஆசை
வாடகையில் குடியிருந்த பொழுது
இத்தனைக்கும் ஆசைப்பட்ட உனக்கு
அத்தனையும் வாங்கி தர
நானிருக்கேன் இன்று
நீ இல்லையே என்னுடன்...

Apr 29, 2010

என்னருகில் நீ இருந்தால்

தள்ளாடி நின்றவனை
தாங்கி பிடிக்க வந்தவளே
என் கூட நீ இருந்துவிட்டா
பல சிகரத்தையும் தொட்டுடுவேன்
தள்ளாடும் வயசு வரை...
போராடி தோற்றதையும் பொருமையுடன்
தோற்கடிப்பேன்
தடைகளையும் உடைத்து உனக்கு
மெத்தையாக மாற்றிடுவேன்
நத்தை போல் செல்லாமல் முயலாய்
பாய்ந்து பல சாகசத்தையும் புரிந்துடுவேன்
என்னருகில் நீ இருந்தால்...

Apr 28, 2010

லஞ்சம்

அடகு கடை வைக்க
தாசில்தாருக்கு லஞ்சம் கொடுக்க
அடகு வைத்தான் தன் மனைவி
தாலியை மற்றொரு அடகு கடையில்...

Apr 27, 2010

குடியற்ற சமுதாயம்

மதுவில் மாட்டிக்கொண்டு
கணையம் கல்லீரலை இழக்கனுமா
நீரும் போகாமல் சிறுநீரகமும் சுருங்கனுமா
குடியால் குடியிழந்த பல குலமகளின்
வாழ்வையும் சிந்திக்க வேண்டாமா
கஷ்ட்டபட்டு சம்பாதித்து இஷ்ட்டபட்டு குடித்து
வாழ்விழந்த நண்பர்களும் மூத்த அண்ணார்களும்
கொஞ்சமோ நஞ்சமோ
வாருங்கள் என்னுயிர் தோழர்களே
குடியற்ற சமுதாயம் படைக்க!!!

Apr 26, 2010

காதல் கைதி

என் மனதை
திருடிய நீ
காதல் விலங்கிட்டு உன்
பார்வை பல்லாக்கில்
எவ்வளவு தூரம் அழைத்து செல்வாய்?
இந்த சூழ்நிலை கைதியை
எப்பொழுது ஆயுள் கைதியாய் மாற்றுவாய்?
தயவு செய்து சாதி, மதம், ஜாதகம் போன்ற
இருளில் தள்ளி எனக்கு மரண தண்டனை
விதித்து விடாதே...

உன்னைக் கண்டவுடன்

ஓடி ஆடி திரிந்த நான்
உன்னைக் கண்டவுடன்
உட்கார்ந்துவிட்டேன் மூலையில்
ஒரு காதல் கிறுக்கனாய் கையில் பேனாவுடன்...

Apr 23, 2010

ஈழத்தின் வலி

கூப்பிடும் தூரத்தில் நண்பர்களாய் நாங்கள் இருந்தும்
நம் எதிரிக்கு நண்பர்களாய்
இங்கு ஆட்சியாளர்கள் ...
உன்னை அழிக்க இவர்களும் ஒரு வகையில்
காரணமாய் இருக்கிறார்களே...
மரணத்தின் பிடியில்
நீ துடிக்க அங்கு
சோகத்தின் பிடியில்
துடிக்கிறோம் இங்கு
மணலில் போட்ட மண்புழுவாய்...

Apr 22, 2010

மெளனஒலி

காகிதத்தில் கப்பல் விட்டு
கண்மாய் கரையில் அமர்ந்த எனக்கு
அலையோசையை மேளமாக்கி
கால் கொழுசை தாளமாக்கி
நடையை நடனமாக்கி
உன் பேச்செனும் பாட்டை ரசிக்க துடிக்க
மெளனஒலி எழுப்பிவிட்டு
செல்கிறாயே...
இந்த மெளனம் சம்மதமா இல்லை எனக்கு பின்
சங்கடமா?
சொல்லடி என் சங்க தமிழ் செல்வியே?

Apr 21, 2010

தேடினேன்

காதலில் விழுந்து கடலை
போடாமல் மிச்சம்
செய்த நேரத்தில்
தேடினேன் அவளின்
செருப்பை கோவிலுக்கு வெளியே!!!

காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்று
மற்றவர்களுக்கு உபதேசம் கூறிவிட்டு
கடமைக் கண்ணிழ்ந்து
காலப் பொன்னிழந்து
தேடினேன் எட்டே முக்கால்
வடபழனி பேருந்தில்
அவள் வாராளா என்று...

இறந்த காலம் ஏற்கனவே
இறந்துவிட்டது
நிகழ்காலம் கேட்கிறது உனக்கு
எதிர்காலம் இன்னும் அவளால் இருக்கிறதா என்று?

பறிபோன மகிழ்ச்சி

உன்னை பார்த்த நிமிடங்களில்
கிடைத்த மகிழ்ச்சி
பறிபோனது நொடிகளில்
உன் பெயரை "பரிமளா சந்திரன்"
எனக் கேட்டவுடன்...
மீண்டும் புத்துணர்ச்சி
"சந்திரன்" உன் தந்தையின் பெயரென தெரிந்தவுடன்....

Apr 20, 2010

இலையுதிர் கால வண்டாய்

செயலிழந்த இயந்திரமாய்
வழுவிழந்து நிற்கிறேன்
உன் முகம் காணாமல்...
என் செயல் செய்ய
உன் கடைக்கண் பார்வை
சாவியை கனவிலும் தேடுகிறேன்
ஒரு பூட்டாக...
கூட்டாக வந்து என்
நிலையை குலைத்து
சென்ற உன்னை நினைத்து
பாட்டாக பாடுகிறேன்
"நீ வருவாய் என" என்று...
பூவின்றி தவிக்கும் இலையுதிர் கால
வண்டாய் ஏங்குகிறேன்
உன்னை காணும் காலம் வரை
எப்படி போக்குவேன் இங்கு என்று...
உன் பார்வை ஒருமுறை பட்டால்
இழந்ததையும் மீட்டுடுவேன்
இல்லாததையும் பெற்றிடுவேன்
என் ஏழேழு ஜென்மத்திற்க்கு...
தாயே அருள்புரிவாயே என் அங்காள பரமேஸ்வரி!!!

அமிழ்தமாய் ...

அன்று அன்பாய் அழைத்து
அம்மா கொடுத்த அரை குவளை தண்ணீர்
அமிழ்தமாய் இனித்ததே
இன்று என்னவள் கொடுக்கும்
முழு குவளை பாலும்
கசக்குதே
இனிப்பு அதிகமாய் போட்டும்...

Apr 19, 2010

தஞ்சம்

கண்ணுக்கு விருந்தாக அவளின் திருமுகம் பார்க்கையில்
மண்ணுக்கு மனமாக அந்தி மழை பொழிய
சட்டென்று தஞ்சம் அடைந்தாள்
மெல்லிய தூரலாய் என்
கிள்ளிய மனதில்!!!

Apr 16, 2010

கருவேலை

கருவேலைக்கும் சீமை கருவேலைக்கும்
இடையில் ஆடிய ஆட்டங்களால்
அடங்கிவிட்டேன்
இன்று அந்நிய தேசத்தில்!!!

Apr 15, 2010

அந்த சிரிப்பு

எட்டி நடந்து ஓடி போயி
பார்த்தேன் அவள் முகத்தை !
சூரிய காந்தியாய் என்னை நோக்கி
சிரித்த அவளின்
சிரிப்பு அப்பொழுது
புரியவில்லை
இடறி விழுந்து முட்டியில்
சொட்டும் இரத்தத்தை
துடைக்க உணர்த்தவென்று!!!

Apr 14, 2010

தமிழ்ப் புத்தாண்டு

என்று பிறந்தாய் என் தாயே
அறுபது வருடங்களில் பிரபவ முதல்
அட்சய வரை அழகுற திகழ்பவளே
மண் தோன்றாக்காலத்தின் முன்பே
முன் தோன்றிய மூத்தகுடி என் தமிழ்குடி என்று
என் தமிழ் ஐயா வாழ்த்தப் பெற்றவளே !
விரோதியை விரட்டி இன்று விக்ருதியாய்
பிறப்பவளே !
நீ பிறந்த இந்த நன்நாளில்
உன் புகழை தரணியெங்கும் பரப்புகிறோம் தாயே!

Apr 12, 2010

திருடும் வரை

துன்பத்தில் கனமாகவும்
இன்பத்தில் இலகுவாகவும்
இருந்தது என் இதயம்
அவள் அதைத் திருடும் வரை ...
துன்பமே விடை கொடுத்தது
அவள் என்னுடன் கதைக்க ஆரம்பித்தவுடன் !
இன்பமே குடி கொண்டது
அவள் என்னுடன் வாழ ஆரம்பித்தவுடன் !!

சீக்கிரம் சொல்லிவிடு

பாலையாய் இருந்த நிலத்தை
மருதமாய் மாற்றி அதில்
குறிஞ்சி முல்லை பூக்களை நட்டு
அவற்றை
நெய்தலில் இட்டு செல்வாயா
இல்லை
என்னை விட்டு செல்லாமல்
இருப்பாயா
என்று தொட்டு கேட்கிறேன்
உன் இதயத்தை
பதில் வரும் வரை வருத்தப் பட்டு
கிடப்பேன் என் அன்பே
உன் பதிலை
சீக்கிரம் சொல்லிவிடு
^_^

Apr 9, 2010

தணியுமா என் தாகம்?

இன்பத்தை கூட்டி
துன்பத்தை கழித்து
நட்பை பெருக்கி
நல்வாழ்க்கைக்கு வழி வகுத்த
பல வழிகாட்டிகள் எடுத்தோ முப்பத்தாறு கணிதத்தில்

நான் எடுத்த நூறால்
இருக்க இன்பமும் குறையுது
நொடியில் துன்பமும் பெருகுது
உண்மையான நட்பும் சிறுகுது...
இந்த அந்நிய தேச மோகம் என்று தணியும் என் தாகத்தில்

Apr 8, 2010

மனமா இனமா?

யான் அடைந்தேன் ஆனந்தம்
நின் வருகையால்
யாம் அடைகிறோம் ஆறாத்துயர்
இணைந்த இரு இதயதை பிரிக்க துடிக்கும் சாதியால்
சேர்ந்த கதை பற்றி பேசி மகிழயிலே பிரிக்க
நேரும் கதையை பற்றி கூற வருவது
நியாயமா?
இணைந்த இரு மனதை பிரிக்க
இனத்தை ஒரு காரணமாக்கலாமா?
என்றும் கற்றாலை பசுமையாய் வாழ
நினைக்கையிலே
இன்று வெற்று இலையாய் உதிர்த்து
வெயிலில் போடலாமா?

Apr 5, 2010

என்னை மறந்தேன்

உன் புகைப்படத்தை பார்த்தவுடன்
என்னை மறந்தேன்
உன்னையே பார்த்தவுடன்
இவ்வுலகையே மறந்தேன்
உன் பெயரை கேட்டவுடன்
என் தமிழை மறந்தேன்
உன்னுடன் பேச ஆரம்பித்தவுடன்
நானும் பேசுவேன் என்பதை மறந்து
உன் பேச்செனும் இசையை இரசித்தேன்
இன்று நீயின்றி என்னுள் ஓரணுவும்
அசையாதென்பதை உணர்கிறேன்.

அருகம்புல்லின் வாழ்க்கை தத்துவமும் அதன் மருத்துவ பயன்பாடுகளும்

"ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க"

இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.


* மலச்சிக்கலைப் போக்கும்

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

* மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.

* அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

* நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.

* அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

* நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்
(நன்றி நக்கீரன் 1.12.2008)


இன்றைய பெரிய வியாதிகளில் கிட்னி ஃபெயிலியர்தான் முதலிடம் பெறுகிறது. இந்த கிட்னி ஃபெயிலியர் எதனால் ஏற்படுகின்றது என்பதை சிறுநீரக சிகிச்சை நிபுணர்களாலேயே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றார்கள்.

யுனானி, சித்தா, ஆயுர்வேதம் இதற்கு விளக்கம் அளிக்கின்றது. இரத்தம், கபம், வாதம், கரும்பித்தம் ஆகிய நான்கு தோஷங்கள் நம் உடலில் இருக்கின்றன. அவைகளை உருவாக்கும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் சுத்தமான தோஷங்கள் சுரக்கும். இந்த தோஷங்கள் சூடு, வறட்சி, குளிர்ச்சி, ஈரத்தன்மை ஆகிய நான்கு விதமான நிலையில் இருக்கும்.

சிறநீரகங்களில் அதிகமான உஷ்ணம், வறட்சி, ஏற்படும் நிலையில் சிறுநீரகங்கள் சுருங்கி சிறுத்து விடுகின்றன. நெஃப்ரான்ஸ் என்னும் இரத்தக் குழாய்கள் வறண்டு விடுகின்றன. அதனால் சிறநீரகம் செயலிழந்து தன் பணியைச் செய்ய முடியாததால் யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், சோடியம் போன்ற கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துவிடும். அதனால் வாந்தி, இளைப்பு, விக்கல், கை, கால் வீக்கம், சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிடுவார்கள். இதற்கு (CHRONIC RENAL FAILURE) CRF என்பார்கள்.

இந்நிலையில் பழங்காலத்தில் இறைவனையும், அருகம்புல்லையும் வணங்கிவிட்டு மக்கள் அருகம்புல் மருந்தைச் சாப்பிடுவார்கள். சிறுநீரகம் உஷ்ணம் தணிந்து மீண்டும் இயங்கும்.

இரத்த சுத்தி மருந்துகளைக் கொடுத்து யூரியா, கிரியாட்டினின்கள் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவார்கள். இன்று ஆங்கில மருத்துவத்தில் சிறுநீரகத்தை மாற்றுகினறார்கள். டயாலிஸிஸ் செய்கின்றார்கள். ஆயினும் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.

முன்பு இறைவனும், மருந்தும் மனிதனின் நோயைக் குணப்படுத்தியதால் இந்திய மக்கள் கடவுளுக்கும் செடி, கொடி, மரங்களுக்கும் நன்றியைச் செலுத்தும் வகையில் வணங்கி வந்தனர் என்ற உண்மை விளங்குகின்றது.

யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.


ஆராய்ச்சியாளர்கள் கருத்து:

அருகம்புல் இறவாமல் என்றும் நிலைத்து வளர்ந்து வாழ்ந்து வருவது எதனால் என்பதை ருஷ்ய நாட்டு உயிரியல் அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர்.

இப்புல்லின் வளருங்குருத்தில் உள்ள செல்களை நுண்ணோக்கி மூலம் காணும்போது அவற்றில் செல்லின் கரு ‘நியூக்ளியஸ்’ காணப்படும். அதில் உள்ள ‘நியூக்கிளியோலஸ்’ என்ற உட்கருவை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மடங்கில் பெரிதாக்கிப் பார்த்ததில் அவற்றில் உள்ள டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மூலக்கூறு அமிலங்கள் தென்பட்டன.

அவற்றின் பாரம்பரியத்தைத் தொடச்செய்யும் ஆர்.என்.ஏ. அமிலத்தின் மூலக்கூறுகள் கணந்தோறும் சிதைந்து கொண்டு வருவதையும், அவற்றை உடனுக்குடன் சரிபார்த்து சீர்படுத்தும் மிக அற்புதமான சுரப்பி நீர் இம்மூலக்கூறு அமிலத்தாலேயே உண்டாக்கப்படுகிறது என்பதையும், அவையே சிதைந்து மூப்பைத் தரும் ஆர்.என்.ஏ. அமிலத்தின் மூலக்கூறுகளையும் சிதையாமல் செப்பனிடுகின்றன என்பதையும் துல்லியமாக ஆய்ந்து கண்டுள்ளனர். இந்த அற்புதமான சுரப்பிநீர் வேறு எந்தவிதமான உயிர்களின் ‘நியூக்கிளியோலஸ்’களிலும் உணடாவதில்லையாம்.

எப்படியாவது இந்த அற்புத நீரைச் சுரக்குமாறு மனிதக் கருவில் செய்துவிட்டால் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளைச் சிதையாமல் காக்கலாம் என்றும், அப்போதுதான் மனிதன் மூப்பு வராமல் வாழ்வான் என்றும், இது தொடர்பான பேராய்வுகளை நெடிது வாழும் வகை தேடும் ஆய்வுத் துறைகள் மேற்கொண்டுள்ளன எனும் தகவல்கள் புதுமையானவை.

சந்தி

முச்சந்தியில் அன்று உன்னைக் கண்டேன்
எச்சந்தியிலும் சுற்றிய நம்மை
சந்தியும் கேட்கிறதே எங்களுக்கு
பந்தி எப்பொழுது என்று?

Apr 2, 2010

என் இனிய பேருந்து பயணம்

முண்டியடித்து ஓடினோம்
முன் சீட்டில் இடம் போட
நொன்டி வந்தவருக்கோ
உட்கார இடம் கொடுத்து
பண்ணை அரிவாளும் மண்குத்தி
கடப்பாரையும் சீட்டுக்கு அடியில் போட
மண் அள்ளும் கூடையையும்
கூடைக்குமேல் மதிய உணவு தூக்குவாளியையும்
சீட்டுக்கு இடையில் சொருகி
காய்கறி மூட்டையையும்
அப்பத்தா இழுத்து வந்த இரண்டு ஆட்டையும்
நடத்துனரின் பானிபட்டு
சொல் போருக்கு பிறகு ஏற்றி
பள்ளி செல்லும்
இலவச பஸ் பாசை இடம் இருக்கும்வரை
ஒன்று விடாமல் ஏற்றிவிட்டு
இடமிருந்தும் காத்து வாங்க படியில்
தொங்கும் நண்பர்களின் உடைமைகளை
ஜன்னல் சீட்டில் வாங்கி கொடுத்தவுடன்
கண்டக்டர் ஊதுமுன்னே
கம்பியில் தொங்கும் என் நண்பன்
விசில் ஊதி போகலாம் ரைட் சொல்ல
போய் சேர்ந்தோம் கலகல பேச்சுடன்
காரியாபட்டிக்கு.

Apr 1, 2010

அருகில் வரவா?

என் மனதை
உன் பார்வைக்கடலில்
மூழ்கடித்து
நீந்தி மகிழும்
இந்த தருணத்தில்
தேனிலும் இனிய
உன் செந்தமிழைப் பருக
அருகில் வரவா?

Mar 31, 2010

நெருஞ்சி முள்கள்

முதலில் பார்த்த
தருணத்திலே என் மனதை
அடகுவைத்தேன் உன்னிடத்திலே !
அதை உனக்கே சொந்தமாக்க நினைக்கையிலே
சாதி மதம் ஜாதகம் என்ற எத்தனை
நெருஞ்சி முள்கள் நம் பாதையிலே !!
இந்த விச முற்களை எப்படி பிடுங்குவேன்
எல்லோருடைய இதயத்தில் இருந்தும்?

Mar 29, 2010

சுடர்கொடியே

நடுக்கடலில் நிலை தவறிய படகை
இழுத்து வந்து கரை சேர்த்த அலையை போல்
வாடி கருகிய பயிரை சாக விடாமல்
பெய்த மழையை போல்
தோல்வியின் பிடியில் உழன்று கழண்ட என் வாழ்வில்
சுடரொளி ஏற்ற வந்த சுடர்கொடியே
இத்தனை நாளாய் அமாவாசையில்
தவித்த எனக்கு பெளர்ணமியாக இருப்பாயா
என் வாழ்வெல்லாம்?

நிம்மதியைத் தேடி

எண்பத்தெட்டில் என் தந்தை
கொடுத்த பத்து பைசாவில் இருந்த
மகிழ்ச்சி இன்று நான் சம்பாதிக்கும் இருபத்தெட்டு ஆயிரத்தில்
இல்லையே?

நூலகத்திற்கு சென்றேன்
அங்கு பல புத்தகம் கண்டேன்
பணம் எப்படி லட்சத்தில்
சம்பாதிப்பதென்று? - ஆனால்
ஒரு புத்தகமும் கண்டிலேன்
இருக்க பணத்தில் எப்படி நிம்மதியாக
இருப்பதென்று?

Mar 28, 2010

சோகம் தனித்த பால்நிலவே

கல்லூரிக்கு முழுக்கு போட்டு
பல பேருந்தை தேடி விட்டு
சோகத்தில் தாகம் தனிக்க நினைத்த
பொழுது
பின்னாடி மறைந்து வந்து
என் முன்னாடி தோன்றிய அந்த பால்நிலவை
பார்த்த சந்தோஷத்தை
எப்படி சொல்வேன் இந்த ஓரிரு வரிகளில்?

Mar 27, 2010

காகிதங்களைத் தாக்கும் ஆயுதங்கள்

சொல் மறக்கும் தலைவனுக்கு ஓட்டளித்து
செல் அரித்த காகிதங்களாக இருக்கும்
என்னை
விலைவாசி உயர்வு வேலை இல்லா
திண்டாட்டம் என்ற ஆயுதங்களால்
தாக்குவது நியாயமோ?

வட்டம் முதல் மேல் மட்டம் வரை
எங்கு செல்வேன் என் வலியைச்
சொல்ல?
இறுதியில் சட்டென்று
தோன்றியது சட்டத்தின் பிடிகள்!

சட்டத்திலும் இடமும் இல்லை ஏமாந்து நிற்க்கும்
ஓட்டளித்த ஏழையை காப்பாற்றி
ஏமாற்றிய வேட்பாளனை தண்டிக்க!!

பட்டமும் எமாற்றியது வேலையில்லாமல்
கடைசியில் சட்டமும் எமாற்றியது நீதியில்லாமல்!!!

Mar 26, 2010

மின்மினியா இல்லை என் கண்மணியா ?

கண் சிமிட்டும் நேரத்தில் மின்மினியாய்
வந்து சென்ற உன்னை நினைத்து
வருடக்கணக்கில் தவம்
கிடக்கிறேன் இனி உன்னை காண்பேனா
என்று?

பொழுதொரு கணத்திலும்
பொருமையாய் யோசிக்கிறேன்
மீதமுள்ள வாழ்நாளை
மீட்சியடைய செய்யவந்த
கண்மணியா
என்று?

மின்மினியா இல்லை நீ எந்தன் கண்மணியா
என்று எனக்கு உணர்த்தும் நாளை
எண்ணி ஏங்குகிறேன்
என் பொன்மணியே!!!

Mar 25, 2010

இடைத்தேர்தல்

சேலையும் சேலைக்கு இடையில் காந்தியும்
பரிசுப்பொருளும் பரிசுப்பொருளுக்கு இடையில் காந்தியும்
இப்படி காந்தி இடையில் நுழைந்ததால் தான்
இதற்கு பெயர் இடைத்தேர்தலோ?


பெரிய ஒரு காந்திய கொடுத்து
பல நூறு கோடியை ஏன் பல்லாயிரம் கோடியை
கொள்ளை அடிக்க போவது நம்முடைய பணம்
என்று தெரிந்துமே
இடையில் வாங்கலாமா?

இந்திய தாயின் குரல் வலையாகிய
ஜனநாயகம் பணநாயகத்தின் பிடியில் சிக்கி
சீரழிவதை ஒழிக்க எனக்கொரு
வழி சொல்லுங்களேன்
என் அருமை
தோழர்களே தோழிகளே!!!


இப்படிக்கு
மாற்றம் காண துடிக்கும்
உங்கள் நண்பன்
ரமேஷ் ராமலிங்கம்.

யார் இந்த பாவை?

தவழ்ந்து தவழ்ந்து சென்ற என் வாழ்கை ஓடத்தை
புதுப்பிக்க வந்த பாவை தான் இந்த
காவை தமிழச்சியோ?

Mar 24, 2010

அரச மரத்தின் பயன்களும், இன்றைய திருமணத்தின் அவல நிலையும்

ஏன் அரசமரத்தைச் சுற்றினால் பிள்ளை கிடைக்கும் என்கிறார்கள்?

மார்கழி மாதத்தில் அதிகாலையில் குழந்தைபாக்யம் இல்லாத பெண்கள் தினமும் அரசமரத்தைச் சுற்றி வந்தால் நிச்சயமாக குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம்.எப்படி? என்பதை மேல்நாடுகள் ஆராய்ந்துவிட்டன.

குளிர்கால வைகறைப் பொழுதில் ஆலமரம் அளவற்ற ஆக்சிஜன் வெளியிடுகிறது.அதே சமயம் ஓசோன் காற்று தரைமுழுக்கப்படருகிறது.ஆக்சிஜன்+ ஓசோன்+ ஆலமரத்து விழுதுகளின் ஈரத்தன்மை இணைந்து செலினியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது. இந்த செலினியம் டை ஆக்சைடு கருப்பை சார்ந்த கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் உடையதாம்.

தெரியாத விசயத்தை தெரியப்படுத்தியற்காக நண்பர் திரு.சுவாமிராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல ஆசைபடுகிறேன்.
(சான்று.நன்றி:தினமலர்.1994,பிப்ரவரி1)

ஆனால் என்னோட வாதம் எல்லாம் (விதண்ட வாதம் இல்லை), இன்றைய சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமண வரம் வேண்டி சாமியாரிடம் போவதும் , தோஷம் கழிக்க ஜோசியரிடம் போவதுமே அதிகம்.

திருமணத்தில் யோனி பொருத்தம் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை , ஒரு குழந்தை பெற ஆண்ட்ரோஜென் , ஈஸ்ட்ரோஜென் என்று சொல்ல கூடிய ஆண்/பெண் இனபெருக்க ஹார்மோன்கள் உற்பத்தி பண்ணக்கூடிய செல்கள் சரியான விகிதத்தில் இருக்கின்றனவா என்று யாரும் பார்ப்பதில்லை.

என்னோட வாதம் எல்லாம் யோனி பொருத்தம் உட்பட பத்து பொருத்தம் உள்ள மலட்டு தன்மை உடைய ஆணோ அல்லது பெண்ணுக்கோ குழந்தை பிறக்குமா?

ஒரே சாதி ஆணை/பெண்ணை தேடுவதில் காட்டும் ஆர்வத்தை , நல்லவனாக/நல்லவளாக வேறு சாதியில்/மதத்தில் இருந்தால் இதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

இப்படிக்கு,
உங்கள் நண்பன்,
ரமேஷ் ராமலிங்கம்

தியாகத்திருமகள்

அன்பை மலையாய் கொடுத்து அறிவை கடலாய் பெருக வைத்து
பட்டினியை அறவே நீக்க
தான் பட்டினிய தவிர வேறேதும் பார்க்காத,
படைத்த கடவுளுக்கே கடவுள் அல்லவா
தியாகத்திருமகள் !!!

Mar 23, 2010

கார்காலம்

இந்த தனிமை இருளில் அடைபட்டு
கிடக்கும் எனக்கு
என் வெண்மதியை காணும் காலம் தான் கார்காலமோ?

Apr 12, 2007

என்னைப் பற்றி

என்னைப் பற்றி
சொல்வதற்கு இருந்தால் சொல்லியிருப்பேன்
பேசுவதற்கு இருந்தால் பேசி இருப்பேன்
இன்னுமா புரியவில்லை
இவன் ஒரு வெட்டியான் என்று...