Apr 30, 2010

ஆசை நிராசையாய்

குறட்டை விட்டு தூங்க ஆசை
இரவிலும் வேலை பார்த்த பொழுது
சோறுக்கு ஆசை கூழ் குடித்து
உயிர் வாழ்ந்த பொழுது
கட்டிலுக்கு ஆசை கட்டாந்தரையில்
தூங்கிய பொழுது
செருப்புக்கு ஆசை முள்தரையில்
வெறுங்காலில் நடந்த பொழுது
புது சட்டை போட ஆசை
கந்தலில் காலம் கழித்த பொழுது
சொந்த வீட்டிற்கு ஆசை
வாடகையில் குடியிருந்த பொழுது
இத்தனைக்கும் ஆசைப்பட்ட உனக்கு
அத்தனையும் வாங்கி தர
நானிருக்கேன் இன்று
நீ இல்லையே என்னுடன்...

Apr 29, 2010

என்னருகில் நீ இருந்தால்

தள்ளாடி நின்றவனை
தாங்கி பிடிக்க வந்தவளே
என் கூட நீ இருந்துவிட்டா
பல சிகரத்தையும் தொட்டுடுவேன்
தள்ளாடும் வயசு வரை...
போராடி தோற்றதையும் பொருமையுடன்
தோற்கடிப்பேன்
தடைகளையும் உடைத்து உனக்கு
மெத்தையாக மாற்றிடுவேன்
நத்தை போல் செல்லாமல் முயலாய்
பாய்ந்து பல சாகசத்தையும் புரிந்துடுவேன்
என்னருகில் நீ இருந்தால்...

Apr 28, 2010

லஞ்சம்

அடகு கடை வைக்க
தாசில்தாருக்கு லஞ்சம் கொடுக்க
அடகு வைத்தான் தன் மனைவி
தாலியை மற்றொரு அடகு கடையில்...

Apr 27, 2010

குடியற்ற சமுதாயம்

மதுவில் மாட்டிக்கொண்டு
கணையம் கல்லீரலை இழக்கனுமா
நீரும் போகாமல் சிறுநீரகமும் சுருங்கனுமா
குடியால் குடியிழந்த பல குலமகளின்
வாழ்வையும் சிந்திக்க வேண்டாமா
கஷ்ட்டபட்டு சம்பாதித்து இஷ்ட்டபட்டு குடித்து
வாழ்விழந்த நண்பர்களும் மூத்த அண்ணார்களும்
கொஞ்சமோ நஞ்சமோ
வாருங்கள் என்னுயிர் தோழர்களே
குடியற்ற சமுதாயம் படைக்க!!!

Apr 26, 2010

காதல் கைதி

என் மனதை
திருடிய நீ
காதல் விலங்கிட்டு உன்
பார்வை பல்லாக்கில்
எவ்வளவு தூரம் அழைத்து செல்வாய்?
இந்த சூழ்நிலை கைதியை
எப்பொழுது ஆயுள் கைதியாய் மாற்றுவாய்?
தயவு செய்து சாதி, மதம், ஜாதகம் போன்ற
இருளில் தள்ளி எனக்கு மரண தண்டனை
விதித்து விடாதே...

உன்னைக் கண்டவுடன்

ஓடி ஆடி திரிந்த நான்
உன்னைக் கண்டவுடன்
உட்கார்ந்துவிட்டேன் மூலையில்
ஒரு காதல் கிறுக்கனாய் கையில் பேனாவுடன்...

Apr 23, 2010

ஈழத்தின் வலி

கூப்பிடும் தூரத்தில் நண்பர்களாய் நாங்கள் இருந்தும்
நம் எதிரிக்கு நண்பர்களாய்
இங்கு ஆட்சியாளர்கள் ...
உன்னை அழிக்க இவர்களும் ஒரு வகையில்
காரணமாய் இருக்கிறார்களே...
மரணத்தின் பிடியில்
நீ துடிக்க அங்கு
சோகத்தின் பிடியில்
துடிக்கிறோம் இங்கு
மணலில் போட்ட மண்புழுவாய்...

Apr 22, 2010

மெளனஒலி

காகிதத்தில் கப்பல் விட்டு
கண்மாய் கரையில் அமர்ந்த எனக்கு
அலையோசையை மேளமாக்கி
கால் கொழுசை தாளமாக்கி
நடையை நடனமாக்கி
உன் பேச்செனும் பாட்டை ரசிக்க துடிக்க
மெளனஒலி எழுப்பிவிட்டு
செல்கிறாயே...
இந்த மெளனம் சம்மதமா இல்லை எனக்கு பின்
சங்கடமா?
சொல்லடி என் சங்க தமிழ் செல்வியே?

Apr 21, 2010

தேடினேன்

காதலில் விழுந்து கடலை
போடாமல் மிச்சம்
செய்த நேரத்தில்
தேடினேன் அவளின்
செருப்பை கோவிலுக்கு வெளியே!!!

காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்று
மற்றவர்களுக்கு உபதேசம் கூறிவிட்டு
கடமைக் கண்ணிழ்ந்து
காலப் பொன்னிழந்து
தேடினேன் எட்டே முக்கால்
வடபழனி பேருந்தில்
அவள் வாராளா என்று...

இறந்த காலம் ஏற்கனவே
இறந்துவிட்டது
நிகழ்காலம் கேட்கிறது உனக்கு
எதிர்காலம் இன்னும் அவளால் இருக்கிறதா என்று?

பறிபோன மகிழ்ச்சி

உன்னை பார்த்த நிமிடங்களில்
கிடைத்த மகிழ்ச்சி
பறிபோனது நொடிகளில்
உன் பெயரை "பரிமளா சந்திரன்"
எனக் கேட்டவுடன்...
மீண்டும் புத்துணர்ச்சி
"சந்திரன்" உன் தந்தையின் பெயரென தெரிந்தவுடன்....

Apr 20, 2010

இலையுதிர் கால வண்டாய்

செயலிழந்த இயந்திரமாய்
வழுவிழந்து நிற்கிறேன்
உன் முகம் காணாமல்...
என் செயல் செய்ய
உன் கடைக்கண் பார்வை
சாவியை கனவிலும் தேடுகிறேன்
ஒரு பூட்டாக...
கூட்டாக வந்து என்
நிலையை குலைத்து
சென்ற உன்னை நினைத்து
பாட்டாக பாடுகிறேன்
"நீ வருவாய் என" என்று...
பூவின்றி தவிக்கும் இலையுதிர் கால
வண்டாய் ஏங்குகிறேன்
உன்னை காணும் காலம் வரை
எப்படி போக்குவேன் இங்கு என்று...
உன் பார்வை ஒருமுறை பட்டால்
இழந்ததையும் மீட்டுடுவேன்
இல்லாததையும் பெற்றிடுவேன்
என் ஏழேழு ஜென்மத்திற்க்கு...
தாயே அருள்புரிவாயே என் அங்காள பரமேஸ்வரி!!!

அமிழ்தமாய் ...

அன்று அன்பாய் அழைத்து
அம்மா கொடுத்த அரை குவளை தண்ணீர்
அமிழ்தமாய் இனித்ததே
இன்று என்னவள் கொடுக்கும்
முழு குவளை பாலும்
கசக்குதே
இனிப்பு அதிகமாய் போட்டும்...

Apr 19, 2010

தஞ்சம்

கண்ணுக்கு விருந்தாக அவளின் திருமுகம் பார்க்கையில்
மண்ணுக்கு மனமாக அந்தி மழை பொழிய
சட்டென்று தஞ்சம் அடைந்தாள்
மெல்லிய தூரலாய் என்
கிள்ளிய மனதில்!!!

Apr 16, 2010

கருவேலை

கருவேலைக்கும் சீமை கருவேலைக்கும்
இடையில் ஆடிய ஆட்டங்களால்
அடங்கிவிட்டேன்
இன்று அந்நிய தேசத்தில்!!!

Apr 15, 2010

அந்த சிரிப்பு

எட்டி நடந்து ஓடி போயி
பார்த்தேன் அவள் முகத்தை !
சூரிய காந்தியாய் என்னை நோக்கி
சிரித்த அவளின்
சிரிப்பு அப்பொழுது
புரியவில்லை
இடறி விழுந்து முட்டியில்
சொட்டும் இரத்தத்தை
துடைக்க உணர்த்தவென்று!!!

Apr 14, 2010

தமிழ்ப் புத்தாண்டு

என்று பிறந்தாய் என் தாயே
அறுபது வருடங்களில் பிரபவ முதல்
அட்சய வரை அழகுற திகழ்பவளே
மண் தோன்றாக்காலத்தின் முன்பே
முன் தோன்றிய மூத்தகுடி என் தமிழ்குடி என்று
என் தமிழ் ஐயா வாழ்த்தப் பெற்றவளே !
விரோதியை விரட்டி இன்று விக்ருதியாய்
பிறப்பவளே !
நீ பிறந்த இந்த நன்நாளில்
உன் புகழை தரணியெங்கும் பரப்புகிறோம் தாயே!

Apr 12, 2010

திருடும் வரை

துன்பத்தில் கனமாகவும்
இன்பத்தில் இலகுவாகவும்
இருந்தது என் இதயம்
அவள் அதைத் திருடும் வரை ...
துன்பமே விடை கொடுத்தது
அவள் என்னுடன் கதைக்க ஆரம்பித்தவுடன் !
இன்பமே குடி கொண்டது
அவள் என்னுடன் வாழ ஆரம்பித்தவுடன் !!

சீக்கிரம் சொல்லிவிடு

பாலையாய் இருந்த நிலத்தை
மருதமாய் மாற்றி அதில்
குறிஞ்சி முல்லை பூக்களை நட்டு
அவற்றை
நெய்தலில் இட்டு செல்வாயா
இல்லை
என்னை விட்டு செல்லாமல்
இருப்பாயா
என்று தொட்டு கேட்கிறேன்
உன் இதயத்தை
பதில் வரும் வரை வருத்தப் பட்டு
கிடப்பேன் என் அன்பே
உன் பதிலை
சீக்கிரம் சொல்லிவிடு
^_^

Apr 9, 2010

தணியுமா என் தாகம்?

இன்பத்தை கூட்டி
துன்பத்தை கழித்து
நட்பை பெருக்கி
நல்வாழ்க்கைக்கு வழி வகுத்த
பல வழிகாட்டிகள் எடுத்தோ முப்பத்தாறு கணிதத்தில்

நான் எடுத்த நூறால்
இருக்க இன்பமும் குறையுது
நொடியில் துன்பமும் பெருகுது
உண்மையான நட்பும் சிறுகுது...
இந்த அந்நிய தேச மோகம் என்று தணியும் என் தாகத்தில்

Apr 8, 2010

மனமா இனமா?

யான் அடைந்தேன் ஆனந்தம்
நின் வருகையால்
யாம் அடைகிறோம் ஆறாத்துயர்
இணைந்த இரு இதயதை பிரிக்க துடிக்கும் சாதியால்
சேர்ந்த கதை பற்றி பேசி மகிழயிலே பிரிக்க
நேரும் கதையை பற்றி கூற வருவது
நியாயமா?
இணைந்த இரு மனதை பிரிக்க
இனத்தை ஒரு காரணமாக்கலாமா?
என்றும் கற்றாலை பசுமையாய் வாழ
நினைக்கையிலே
இன்று வெற்று இலையாய் உதிர்த்து
வெயிலில் போடலாமா?

Apr 5, 2010

என்னை மறந்தேன்

உன் புகைப்படத்தை பார்த்தவுடன்
என்னை மறந்தேன்
உன்னையே பார்த்தவுடன்
இவ்வுலகையே மறந்தேன்
உன் பெயரை கேட்டவுடன்
என் தமிழை மறந்தேன்
உன்னுடன் பேச ஆரம்பித்தவுடன்
நானும் பேசுவேன் என்பதை மறந்து
உன் பேச்செனும் இசையை இரசித்தேன்
இன்று நீயின்றி என்னுள் ஓரணுவும்
அசையாதென்பதை உணர்கிறேன்.

அருகம்புல்லின் வாழ்க்கை தத்துவமும் அதன் மருத்துவ பயன்பாடுகளும்

"ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க"

இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.


* மலச்சிக்கலைப் போக்கும்

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

* மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.

* அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

* நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.

* அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

* நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்
(நன்றி நக்கீரன் 1.12.2008)


இன்றைய பெரிய வியாதிகளில் கிட்னி ஃபெயிலியர்தான் முதலிடம் பெறுகிறது. இந்த கிட்னி ஃபெயிலியர் எதனால் ஏற்படுகின்றது என்பதை சிறுநீரக சிகிச்சை நிபுணர்களாலேயே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றார்கள்.

யுனானி, சித்தா, ஆயுர்வேதம் இதற்கு விளக்கம் அளிக்கின்றது. இரத்தம், கபம், வாதம், கரும்பித்தம் ஆகிய நான்கு தோஷங்கள் நம் உடலில் இருக்கின்றன. அவைகளை உருவாக்கும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் சுத்தமான தோஷங்கள் சுரக்கும். இந்த தோஷங்கள் சூடு, வறட்சி, குளிர்ச்சி, ஈரத்தன்மை ஆகிய நான்கு விதமான நிலையில் இருக்கும்.

சிறநீரகங்களில் அதிகமான உஷ்ணம், வறட்சி, ஏற்படும் நிலையில் சிறுநீரகங்கள் சுருங்கி சிறுத்து விடுகின்றன. நெஃப்ரான்ஸ் என்னும் இரத்தக் குழாய்கள் வறண்டு விடுகின்றன. அதனால் சிறநீரகம் செயலிழந்து தன் பணியைச் செய்ய முடியாததால் யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், சோடியம் போன்ற கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துவிடும். அதனால் வாந்தி, இளைப்பு, விக்கல், கை, கால் வீக்கம், சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிடுவார்கள். இதற்கு (CHRONIC RENAL FAILURE) CRF என்பார்கள்.

இந்நிலையில் பழங்காலத்தில் இறைவனையும், அருகம்புல்லையும் வணங்கிவிட்டு மக்கள் அருகம்புல் மருந்தைச் சாப்பிடுவார்கள். சிறுநீரகம் உஷ்ணம் தணிந்து மீண்டும் இயங்கும்.

இரத்த சுத்தி மருந்துகளைக் கொடுத்து யூரியா, கிரியாட்டினின்கள் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவார்கள். இன்று ஆங்கில மருத்துவத்தில் சிறுநீரகத்தை மாற்றுகினறார்கள். டயாலிஸிஸ் செய்கின்றார்கள். ஆயினும் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.

முன்பு இறைவனும், மருந்தும் மனிதனின் நோயைக் குணப்படுத்தியதால் இந்திய மக்கள் கடவுளுக்கும் செடி, கொடி, மரங்களுக்கும் நன்றியைச் செலுத்தும் வகையில் வணங்கி வந்தனர் என்ற உண்மை விளங்குகின்றது.

யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.


ஆராய்ச்சியாளர்கள் கருத்து:

அருகம்புல் இறவாமல் என்றும் நிலைத்து வளர்ந்து வாழ்ந்து வருவது எதனால் என்பதை ருஷ்ய நாட்டு உயிரியல் அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர்.

இப்புல்லின் வளருங்குருத்தில் உள்ள செல்களை நுண்ணோக்கி மூலம் காணும்போது அவற்றில் செல்லின் கரு ‘நியூக்ளியஸ்’ காணப்படும். அதில் உள்ள ‘நியூக்கிளியோலஸ்’ என்ற உட்கருவை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மடங்கில் பெரிதாக்கிப் பார்த்ததில் அவற்றில் உள்ள டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மூலக்கூறு அமிலங்கள் தென்பட்டன.

அவற்றின் பாரம்பரியத்தைத் தொடச்செய்யும் ஆர்.என்.ஏ. அமிலத்தின் மூலக்கூறுகள் கணந்தோறும் சிதைந்து கொண்டு வருவதையும், அவற்றை உடனுக்குடன் சரிபார்த்து சீர்படுத்தும் மிக அற்புதமான சுரப்பி நீர் இம்மூலக்கூறு அமிலத்தாலேயே உண்டாக்கப்படுகிறது என்பதையும், அவையே சிதைந்து மூப்பைத் தரும் ஆர்.என்.ஏ. அமிலத்தின் மூலக்கூறுகளையும் சிதையாமல் செப்பனிடுகின்றன என்பதையும் துல்லியமாக ஆய்ந்து கண்டுள்ளனர். இந்த அற்புதமான சுரப்பிநீர் வேறு எந்தவிதமான உயிர்களின் ‘நியூக்கிளியோலஸ்’களிலும் உணடாவதில்லையாம்.

எப்படியாவது இந்த அற்புத நீரைச் சுரக்குமாறு மனிதக் கருவில் செய்துவிட்டால் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளைச் சிதையாமல் காக்கலாம் என்றும், அப்போதுதான் மனிதன் மூப்பு வராமல் வாழ்வான் என்றும், இது தொடர்பான பேராய்வுகளை நெடிது வாழும் வகை தேடும் ஆய்வுத் துறைகள் மேற்கொண்டுள்ளன எனும் தகவல்கள் புதுமையானவை.

சந்தி

முச்சந்தியில் அன்று உன்னைக் கண்டேன்
எச்சந்தியிலும் சுற்றிய நம்மை
சந்தியும் கேட்கிறதே எங்களுக்கு
பந்தி எப்பொழுது என்று?

Apr 2, 2010

என் இனிய பேருந்து பயணம்

முண்டியடித்து ஓடினோம்
முன் சீட்டில் இடம் போட
நொன்டி வந்தவருக்கோ
உட்கார இடம் கொடுத்து
பண்ணை அரிவாளும் மண்குத்தி
கடப்பாரையும் சீட்டுக்கு அடியில் போட
மண் அள்ளும் கூடையையும்
கூடைக்குமேல் மதிய உணவு தூக்குவாளியையும்
சீட்டுக்கு இடையில் சொருகி
காய்கறி மூட்டையையும்
அப்பத்தா இழுத்து வந்த இரண்டு ஆட்டையும்
நடத்துனரின் பானிபட்டு
சொல் போருக்கு பிறகு ஏற்றி
பள்ளி செல்லும்
இலவச பஸ் பாசை இடம் இருக்கும்வரை
ஒன்று விடாமல் ஏற்றிவிட்டு
இடமிருந்தும் காத்து வாங்க படியில்
தொங்கும் நண்பர்களின் உடைமைகளை
ஜன்னல் சீட்டில் வாங்கி கொடுத்தவுடன்
கண்டக்டர் ஊதுமுன்னே
கம்பியில் தொங்கும் என் நண்பன்
விசில் ஊதி போகலாம் ரைட் சொல்ல
போய் சேர்ந்தோம் கலகல பேச்சுடன்
காரியாபட்டிக்கு.

Apr 1, 2010

அருகில் வரவா?

என் மனதை
உன் பார்வைக்கடலில்
மூழ்கடித்து
நீந்தி மகிழும்
இந்த தருணத்தில்
தேனிலும் இனிய
உன் செந்தமிழைப் பருக
அருகில் வரவா?