Apr 5, 2010

அருகம்புல்லின் வாழ்க்கை தத்துவமும் அதன் மருத்துவ பயன்பாடுகளும்

"ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க"

இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்:

* அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.


* மலச்சிக்கலைப் போக்கும்

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

* மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.

* அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

* நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.

* அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

* நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்
(நன்றி நக்கீரன் 1.12.2008)


இன்றைய பெரிய வியாதிகளில் கிட்னி ஃபெயிலியர்தான் முதலிடம் பெறுகிறது. இந்த கிட்னி ஃபெயிலியர் எதனால் ஏற்படுகின்றது என்பதை சிறுநீரக சிகிச்சை நிபுணர்களாலேயே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றார்கள்.

யுனானி, சித்தா, ஆயுர்வேதம் இதற்கு விளக்கம் அளிக்கின்றது. இரத்தம், கபம், வாதம், கரும்பித்தம் ஆகிய நான்கு தோஷங்கள் நம் உடலில் இருக்கின்றன. அவைகளை உருவாக்கும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் சுத்தமான தோஷங்கள் சுரக்கும். இந்த தோஷங்கள் சூடு, வறட்சி, குளிர்ச்சி, ஈரத்தன்மை ஆகிய நான்கு விதமான நிலையில் இருக்கும்.

சிறநீரகங்களில் அதிகமான உஷ்ணம், வறட்சி, ஏற்படும் நிலையில் சிறுநீரகங்கள் சுருங்கி சிறுத்து விடுகின்றன. நெஃப்ரான்ஸ் என்னும் இரத்தக் குழாய்கள் வறண்டு விடுகின்றன. அதனால் சிறநீரகம் செயலிழந்து தன் பணியைச் செய்ய முடியாததால் யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், சோடியம் போன்ற கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துவிடும். அதனால் வாந்தி, இளைப்பு, விக்கல், கை, கால் வீக்கம், சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிடுவார்கள். இதற்கு (CHRONIC RENAL FAILURE) CRF என்பார்கள்.

இந்நிலையில் பழங்காலத்தில் இறைவனையும், அருகம்புல்லையும் வணங்கிவிட்டு மக்கள் அருகம்புல் மருந்தைச் சாப்பிடுவார்கள். சிறுநீரகம் உஷ்ணம் தணிந்து மீண்டும் இயங்கும்.

இரத்த சுத்தி மருந்துகளைக் கொடுத்து யூரியா, கிரியாட்டினின்கள் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவார்கள். இன்று ஆங்கில மருத்துவத்தில் சிறுநீரகத்தை மாற்றுகினறார்கள். டயாலிஸிஸ் செய்கின்றார்கள். ஆயினும் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.

முன்பு இறைவனும், மருந்தும் மனிதனின் நோயைக் குணப்படுத்தியதால் இந்திய மக்கள் கடவுளுக்கும் செடி, கொடி, மரங்களுக்கும் நன்றியைச் செலுத்தும் வகையில் வணங்கி வந்தனர் என்ற உண்மை விளங்குகின்றது.

யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.


ஆராய்ச்சியாளர்கள் கருத்து:

அருகம்புல் இறவாமல் என்றும் நிலைத்து வளர்ந்து வாழ்ந்து வருவது எதனால் என்பதை ருஷ்ய நாட்டு உயிரியல் அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர்.

இப்புல்லின் வளருங்குருத்தில் உள்ள செல்களை நுண்ணோக்கி மூலம் காணும்போது அவற்றில் செல்லின் கரு ‘நியூக்ளியஸ்’ காணப்படும். அதில் உள்ள ‘நியூக்கிளியோலஸ்’ என்ற உட்கருவை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மடங்கில் பெரிதாக்கிப் பார்த்ததில் அவற்றில் உள்ள டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மூலக்கூறு அமிலங்கள் தென்பட்டன.

அவற்றின் பாரம்பரியத்தைத் தொடச்செய்யும் ஆர்.என்.ஏ. அமிலத்தின் மூலக்கூறுகள் கணந்தோறும் சிதைந்து கொண்டு வருவதையும், அவற்றை உடனுக்குடன் சரிபார்த்து சீர்படுத்தும் மிக அற்புதமான சுரப்பி நீர் இம்மூலக்கூறு அமிலத்தாலேயே உண்டாக்கப்படுகிறது என்பதையும், அவையே சிதைந்து மூப்பைத் தரும் ஆர்.என்.ஏ. அமிலத்தின் மூலக்கூறுகளையும் சிதையாமல் செப்பனிடுகின்றன என்பதையும் துல்லியமாக ஆய்ந்து கண்டுள்ளனர். இந்த அற்புதமான சுரப்பிநீர் வேறு எந்தவிதமான உயிர்களின் ‘நியூக்கிளியோலஸ்’களிலும் உணடாவதில்லையாம்.

எப்படியாவது இந்த அற்புத நீரைச் சுரக்குமாறு மனிதக் கருவில் செய்துவிட்டால் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளைச் சிதையாமல் காக்கலாம் என்றும், அப்போதுதான் மனிதன் மூப்பு வராமல் வாழ்வான் என்றும், இது தொடர்பான பேராய்வுகளை நெடிது வாழும் வகை தேடும் ஆய்வுத் துறைகள் மேற்கொண்டுள்ளன எனும் தகவல்கள் புதுமையானவை.

No comments: