May 31, 2010

சிகரெட்

மூச்சுக்காற்றை நச்சுக்காற்றாய்
மாற்றிடுவானே
புகைகொடுத்துப் பகைபிடித்துக்
கொள்வானே
கணையம் முதல் கல்லீரல் வரை
இதயம் முதல் நுரையீரல் வரை
அத்தனையும் பாதிக்கும் இவன்
புற்று நோயையும் பற்றோடு கூப்பிட்டு
வருவானே
இவனை ஒழிக்க இன்று முதல் உதவுவோம்
இவன் குடிகொண்ட நம் நண்பர்களுக்கு
இப்புகையிலை ஒழிப்பு தினத்தில்...

May 27, 2010

தொட்டால் சுருங்கி

நான் தொட்டதும்
உன்னை மறைத்தாயே
இப்பொழுது விட்டதும்
என்னை பார்க்கிறாயே
இது என்ன
உனக்கு மட்டும்
இவ்வளவு
விருப்பு கலந்த வெட்கம் என்மேல்...

பச்சைக் கொடி

பகல் கனவா போயிடுமோனு
வெறுமையா நினைக்கும் போது
நீ அனுப்பியக் குறுந்தகவல்
என்னை மகிழ்ச்சிக் கடலில் நீராட வைத்ததடி....

அடிக் கள்ளி
இம்புட்டு ஆசையை
அடக்கி நீயே வச்சுக்கிட்டு என்ன
அலைய விட்டுடேயே
உன்ன சுத்திச் சுத்திக் காதல் பண்ண!

நாத்திகனா இருந்தவன
ஆத்திகனா ஆக்கினேயே
என்ன கோயிலில சுத்தவிட்டு...

நீ மட்டும் பக்கத்தில் இருந்தால்
கட்டியணைச்சு முகத்தில்
ஒன்னு முதல் முறையா கொடுத்திருப்பேன்

ஓடி வாரேன்டி நீ காட்டிய பச்சைக் கொடியை
காதல் கொடினு அறிவிக்க...

May 26, 2010

பஞ்சாயத்து யூனியன் நடு நிலைப்பள்ளி, சத்திரம்புளியங்குளம்

அந்த இடம் சென்றவுடன்
ஏதோ நினைக்கிறது மனது
என்னவென்று யோசிக்கையில்
அகரம் புகுத்திய ஒன்றாம் வகுப்பு
கைத்தறி ஆசிரியர்
பசையாய் ஒட்டியிருக்கிறார் ஆழ்மனதில்...

கல்லூரி பல சென்றும்
பிறகு கம்பெனி பல மாறியும்
மனம் மட்டும் மாறாமல் நினைத்து மகிழுதே
ஆரம்பக் கல்வி புகட்டிய தமிழரசி டீச்சரையும்...
பக்கத்தில் இருந்து பாசம் காட்டிய பாலாமணி டீச்சரையும்...

கணிதத்தில் கலக்கும் கண்ணன் சாரையும்,
அறிவியலை அருமையாகப் புகட்டும் சங்கர் சாரையும்
ஒழுக்கம் உயிரினும் மேல் என்று எனக்கு உணர்த்திய
தலைமை ஆசிரியர் போஸ் சாரையும்...
எண்ணாத நாளும் உண்டோ
அந்த இடம் சென்று விட்டால்?

May 25, 2010

அறை எண் 610ல் அன்பரசி

கவலையும் விலை போயிடும்
கடைசி வரை என் இதயத்தின்
ஆரிக்கிளில் அறை எடுத்து நீ தங்கினால்...

தோல்வியும் வெற்றிடமாகிடும்
இருக்கும் வரை என் இதயத்தின்
வென்ரிக்கிளில் உரிமம் எடுத்து நீ உறங்கினால்...

May 24, 2010

உன் நினைவுகள்

உன் நினைவுகள்
என்னைப் பாதிக்கிறது பகலெல்லாம்
என் தூக்கத்தை சோதிக்கிறது இரவெல்லாம்...

உன்னை விட்டுப் பிரிந்த நாட்கள் விடாமல்
துரத்துதே வெகு தொலைவில் நானிருந்தும்...

உன்னையே உலகமென நினத்து வாழ்ந்த
என்னை இவ்வுலகத்தில் தவிக்க விட்டுப் போக
உனக்கெப்படி வந்தது மனம்...

தொட்டு அணைக்க ஆசைப் பட்டேன்
இப்படி உன்னைக் கடைசியாய்க்
கட்டி அணைத்து அழுவேனென்று
கடுகளவும் நினைக்கலேயே...

தனியாய் அழுகிறேன் தனிமையில்
உன் கட்டுக் கட்டான நினைவுகளுடன்...

May 20, 2010

இரட்டை வேடம்

நண்பன் என்றால் நேசிக்கிறோம்
மனைவி என்றால் யோசிக்கிறோம்
வேறொரு சாதியாக வந்தால்...

இந்த இரட்டை வேடம்
அணிந்து இம்மையில் வாழ்கிறோமே...

கடவுள் ஒன்று உண்டு என்றால்
அவர் இதைச் சரி என்றும் சொல்வாரா?

தவறு என்று தெரிந்துமே
தவறாமல் கடைபிடிக்கும் இப்பழக்கத்தை
வேரறுக்க வேண்டாமா நாமாவது?

மாற்றம் வரும் வரும் என்று நாம்
மாறாமல் இருந்தால் மாறிவிடுமோ?

மாறுவோம் மாற்றிடுவோம் என்று
சூழுரைக்க வாருங்கள் தோழர்களே!!!

May 19, 2010

நீயூட்டனின் மூன்றாம் விதி

இமைகளால் சிறைபிடித்து உன்
இளமையால் என்னைக் கட்டி
இழுக்கிறாயே....

நீயூட்டனின் மூன்றாம் விதிப்படி
அன்பு காட்ட நீ இருக்க
ஆப்பு வைக்க உன் தந்தை இருக்கார்...

காசு சுண்டி பார்ப்போமா இவ்விதி
மெய்யாகுதா இல்லை பொய்யாகுதானு?

எழிலரசி

விரயமென்று நினைக்கவில்லை நீ
மறையும் வரை என் கண் உன்னைப் பின்
தொடர்வதை -ஆனால்
நரையும் நிலையை நீ அடைந்தாலும்
இந்தக் குறையாத உன் புன்னகையை
எனக்குத் தருவாயா?

மரையும் இவனுக்கு கழன்றதோ
என்று ஏளனம் செய்கின்றனர்
என் சுற்றத்தினர்
வெறுமை இல்லாத உன் உறவை
இவர்களுக்கு நீயே விளங்க வைப்பாயா
என் எழிலரசியே?

May 18, 2010

அவள் தேடும் இவன்

கட்டுக்கடங்கா காளைகளே
என்னைத் தொட்டு அடக்க வாருங்கடா
காதல் என்ற ஜல்லிக்கட்டில்...

நானும் தேடுகிறேன்
சூழ்நிலையால் தொலைந்திடாத
சூரனை மட்டும்...

என்னை விட்டுப் பிரியாத
மனம் உனக்கிருந்தால்
என் தோள் கொடுத்துத் தாலாட்ட
நானிருக்கேன் நம் கனவிலும் கூட...

எனக்கு அதிகம் சம்பாதிப்பவன்
தேவையில்லை
சம்பாதித்ததைக் "குடி" நீரில்
கரைத்துவிடாமல் நீ இருந்தால் போதும்...

முழு நேரமும் அன்பைக் காட்ட நானிருக்கேன்
ஊதியத்தில் பாதியை
ஊதித் தள்ளாமல் நீ இருந்தால்...

May 17, 2010

அட்சய திருதியை

தன் அவலை கிருஷ்ணனுக்கு கொடுத்ததால்
குசேலன் குபேரன் ஆனானாம் அன்று.

இன்று ஒரு கிராமாவது தங்கம் வாங்க
பழைய பத்து கிராமை
அடகு வைக்கிறான்
ஆறறிவு படத்த அறிவுஜீவி ஒன்று.

இன்று குன்றிமணியளவு நகை வாங்கினால்
வருடம் முழுவதும் குன்றாமல் பெருகுமாம்...
மானிடா உன் மனநலம் மட்டும் தான் குன்றிப்போகும்
கடன் தொல்லையால்...
இதை என்று உணர்வாயடா...

திருமகளின் ஐஸ்வர்யலட்சுமியும், தான்ய லட்சுமியும்
தோன்றிய இந்நாளில் உன் மூளையை
சலவை செய்து ஒரு மூலையில் போடலாமா?

பக்தியை வியாபாரமாக்கி
பாமரனை பழியாக்கும்
இச்செயலைப் படித்தவனும் செய்கிறானே
பகுத்தறிவு இல்லாமல்...

சொன்னால் இம்ம்... கடவுள் உஷ்!!!
என்கிறான் பட்டம் பல பெற்றவனும்...

என்று ஒழியும் இந்த அட்சய திருட்டு...

May 14, 2010

உள்ளே - வெளியே

உன் வீட்டு மாடியில் தங்கி பஞ்சம்
பிழைக்க வந்த எனக்கு
உன் நெஞ்சங்கூட்டில்
தஞ்சம் கொடுத்த
என் மஞ்சள் நிறத்தழகியே...

உன் பஞ்சு மனசால்
என்னைச் சிறைபிடித்து அதன்
உள்ளே தள்ளி விட்டாயே...

என்னை நல்லவன் என்று நம்பும்
உன் தந்தைக்குத் தெரிந்தால்
என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி விடுவாரே...

செல்கிறேன் அன்பே
சேய் மனதில் குடியேறும் முன் முதலில் உன்
தாய் மனதில் இடம்பிடிக்க...

May 13, 2010

காகமாய்

வண்ண மலரே உன் சிரிப்பில்
விழுந்த
கன்னக் குழியில் பல்லாங்குழி
விளையாடுகிறேன்
பகலெல்லாம் உன் நினைவால்...

கண்ணின் இமையும் தன் கடமையைச்
செய்ய மறக்குதே கண்ணே உன்னைக் கண்டவுடன்...

பாட்டி சுட்ட வடைக்கு பதுங்கி இருக்கும் காகமாய்
உன் மனதை திருட
காத்திருந்தேன் காலமெல்லாம்
திருடு போன என் மனதுடன்...

விடை கிடைக்குமென்று வீற்றிருக்கேன்
உன் கல்லூரிச் சாலையில் - ஆனால்
கிடைத்ததோ பிரியா விடை தான்
என் அலுவலகத்தில்...

வேலையிழந்து சாலையில் நின்றாலும்
எனக்கு மாமலையும் ஒரு கடுகுதான்
உன்னை அடைந்துவிட்டால்...

May 12, 2010

சுமை தாங்கி

விண்ணோடு விளையாடிய நம்மை
கண்ணால் கூட பார்க்க முடியாமல் இந்த
மண்ணை விட்டே துரத்தியதே
பணம் என்னும் பாதாளம்..

தங்கையின் திருமணச் சுமை தாழிட்டது
தம்பியின் படிப்பு வேலி போட்டது
தந்தையின் உடல்நலம் என்னை
கட்டிப் போட்டது உன்னை விட்டு போக...
இப்பொழுது அக்காவும் வந்து விட்டாள்
அவள் மகளுக்கு காதுகுத்தென்று...

வேலை போக பகுதி நேரத்திலும்
பம்பரமாய் சுற்றி
எப்படியோ சமாளித்து விட்டேன்
ஒவ்வொரு சுமையாய்...

சுமைகளை இறக்கிய மகிழ்ச்சியை
சுகமாய் அவளுடன் மகிழ
நெருங்கிய எனக்கு
போட்டு விட்டாள் ஒரு பாராங்கல்லை
என் தலையில் -அது
அவளுக்கு வேரொருவனுடன்
நிச்சயதார்த்தம் என்று...

தங்கச்சாமி என்று பெயர் வைத்த என் தந்தை
"சுமை தாங்கும் சாமி" என பெயர் வைக்க
மறந்து விட்டாரே!!!

May 11, 2010

ஏக்கம்

உட்கார்ந்து யோசித்தாலும்
ஒன்றுமே புரியலேயே
ஏன் இந்த ஏக்கம் என்று...

சில பேர் சொல்லுறாங்க
அது தான் கவலையென்று..

மகிழ்ச்சியான வாழ்க்கையிலும் மிச்சமாய்
இருப்பது ஒருவகை ஏக்கம் தானே...

இன்னும் சில பேரோ அதை
ஆசையினும் சொல்கிறாங்க..

திரைகடல் ஓடி திரவியம் தேடி
ஆசயெல்லாம் நிவர்த்தி செஞ்சாலும்
இறங்காம் இருக்குதே இந்த
ஏக்கம் மட்டும்...

நம் மனசு எத நெனச்சு ஏங்குதுன்னு
எவருக்குமே தெரியலையே...

விவரம் தெரிஞ்ச யாராவது விளக்கி
கொஞ்சம் சொல்லுங்களேன்
ஏன் இந்த ஏக்கமுன்னு?

May 9, 2010

மனதை உயிலாய்

முல்லைப் பூவை முதலில்
கண்டேன் திருமுல்லைவாயிலில்
பார்வையம்பை பக்குவமாய் ஏவிவிட்டு
மேகமாய் செல்கிறாளே..
அவள் மீது மோகமாய் தவிக்கிறேன்
என் கனவிலும் கூட...
அன்றோ காற்றில் ஆடிய முல்லைக்கு தன்
தேர் தந்தான் பாரி
இன்றோ என் மனதை உயிலாய் அவள் பெயரில்
மாற்றிவிட்டேன்
இவ்வுயிலை ஏற்பாளா இல்லை
மனநிலை காப்பகத்திற்கு அளிப்பாளா
என்பது அவள் கையில்...

May 7, 2010

கிராமங்களின் நிலை

பட்டுப்போன பனை மரமாய்
நீரின்றி
கண்ணுள்ள குருடர்களாய்
ஒளியின்றி
காலுள்ள நொன்டிகளாய்
சாலையின்றி
பள்ளியிருந்தும் முட்டாளாய்
வாத்தியாரின்றி
இருக்கும் எங்களுக்கு எதற்கு "இலவச கலர் டிவி"
சோற்றுக்கு ஒரு ரூபாய் அரிசி இருக்கு
கொழம்புக்கு முப்பது ரூபாய் வேண்டி இருக்கு...
இந்த நிலை எப்பொழுது மாறும் என்
இந்தியாவின் முதுகெலும்பில்...

May 6, 2010

மரண ராணி

என்னை காதலிக்கும் பொழுது
தேனே நிலவே என்று வருணித்தாயே
இப்பொழுது நீ
தேனிலவு செல்கிறாயே
உன் மாமன் மகளுடன்
நாம் ஊர் சுற்றிய மாமல்லபுரத்திற்க்கே...

என் கையில் பணமிருந்தால்
உன்னை பன்னீரில் குளிப்பாட்டுவேன்
என்றாயே அன்றொருநாள்
இன்று உன்னால் கண்ணீரில் நனைகிறேன்

நமக்கு மட்டும் திருமணம் நடந்தால்
உன்னை மகாராணிபோல் வைத்திருப்பேன் என்றாயே
இன்று உன்னால் மரண ராணியாகிறேன்

உனக்கொரு மகள் பிறந்தால்
மறந்தும் என் பெயர் வைக்காதே
பின்னொரு நாளில் உன்னைப்போல்
இன்னொருவன் அவளையும் கொல்ல...

May 5, 2010

மென்மை

ரோஜாவின் பூவிதழும் மென்மை தான்
பூங்கொடியை தொட்டுப் பார்க்காத வரை
தென்றலும் என்னை சுடுகிறதே
அவளின் வரவைக் காணாத வரை
வானவில்லின் ஏழு வண்ணமும்
அழகு தான்
அவளின் கண்ணின் மையின்
அழகைக் கண்கூடாக் காணாத வரை
ஒளியின் வேகம் தெரியவில்லை அவள்
விழியின் வேகம் என்னை தாக்கும் வரை

May 4, 2010

உழைப்பாளர் தினம்

உழைத்து உழைத்து தளர்ந்த
உடம்பு கேட்டது "ஓய்வு" என்றால் என்னவென்று?
நடந்து நடந்து தேய்ந்த
பாதங்கள் கேட்டது "செருப்பு" என்றால் என்னவென்று?
அல்லும் பகலும் தூக்கமின்றி உழைத்த
கண்கள் கேட்டது "தூக்கம்" என்றால் என்னவென்று?
இப்படி கோடான கோடி மக்களின்
வியர்வைக்கு விடைகொடுக்கும்
அந்த ஒருநாள் தான் உழைப்பாளர் தினமோ?

May 3, 2010

நெஞ்சிலிருந்து நீங்குமா?

தனிமையில் தாழிட்டு கிடக்கும்
என் மனது ஏங்குது
நம்மூர் வயல் வெளியின்
நீர் பாயும் இரட்டை வரப்பில்
தினமும் ஒரு முறையாவது ஏறி
விளையாடவும்..
கரையில் அமர்ந்து கண்மாயின் சுற்றளவை
கண்ணிமையால் கணக்கு பண்ணவும்..
ஆலமர விழுதை ஊஞ்சலாய் மாற்றி
என் பள்ளி மாணவர்களுடன் துள்ளி
தூளியாடவும்..
ஏங்குது என் மனது ...