Jun 29, 2010

கோபம் வரும் நேரம்

ஒன்றாக வந்தோம்
இரண்டாகச் சென்றோம்
இடையில் வந்த இந்த வெட்டிக் கோபத்தால்...

அன்பில் அன்னைக்கு மேல் என்போம்
ஆருயிர் என்று கூட
சொல்வோம்...
சினம் சிந்தையில் ஏறும் வரை...

சிறு கனம் யோசிக்கத் தவறி வரும் சினத்தால்
மனம் பெரும் பாடாய்ப் படுகிறதே...

கோபம் வரும் நேரம் மட்டும்
அமைதி மருந்தை
அந்த இடத்தில் தடவி விட்டால்
எந்த இடம் சென்றாலும் நமக்குச் சிறப்பு தானே!!!

Jun 28, 2010

செப்பனிட நான் வரவா?

வானம் மங்கிய மாலையில்
என் மனம் மயக்க
ஒரு கனம் வந்த
இந்த சோலை
யாரம்மா?

நான் நலம் தான் உன்னை
பார்க்கும் முன் வரை...
நீ எப்படி அங்கு?

எனக்கு உன் உலமான
முகமும் அன்புக் களமாய்
தெரியுதம்மா?

உன் எண்ணத்தில் என்னால்
ஒரு சலனமென்றால்
அதைச் செப்பனிட நான் வரவா?

Jun 24, 2010

ஒருமுறை

உன்னை நிலா என்று வருணிக்க மாட்டேன்.
நிலாவும் தன் உடலை மாதம் ஒருமுறை
மறக்காமல் மறைக்குதே...

ஒருமுறை உன்னைக் காணாவிட்டால்
மறுமுறை துடிக்குமா என் இதயம்
என்றே தெரியவில்லை...

உனக்காக காத்திருக்கும் நேரத்தில்
ஒருமுறை கொள்ளுப் பேத்தி பேரன்
வரை கண்டுவிட்டேன் கனவாக...

ஏதோ கடற்கரையாம், அலையாம்,
மணலாம்,சுண்டலாம்
இதையெல்லாம் ஒருமுறையாவது
பார்ப்போமா?

Jun 23, 2010

தேனீ

மொட்டுக்களும் பூவாகுது
பூக்களும் காயாகுது
காய்களும் கனியாகுது
உங்களின் மன்மத மகரந்தச் சேர்க்கையால்...

மலர்களுக்கு மகரந்தம்
மனிதர்களுக்கு ஓர் ஆனந்தம்

தேனிலும் இனிமை
கண்டதுண்டா மானிடர்
எவரும் இவ்வுலகில் ?

ஒற்றுமைக்கு ஓர் உறைவிடமாய்
கூட்டுகுடும்ப வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாய்
உள்ள நீங்கள்
மனிதர்களுக்கு
ஓர் உன்னதமான உதாரணமல்லவா?

Jun 22, 2010

அம்(ன்)பு

பக்குவமாய் ஏவிய
உன் அம்(ன்)பு
மலர் தூவிய
மெத்தைபோல் நறுமணம் கமலுதடி...

நீ விளைவித்த பாசம்
விலையில்லா வைரமாய்
மின்னுதடி...

உன் வலையில்
மாட்டிய மீனாய்
என்றும் உனக்கு மட்டும்
சொந்தமாய் நானிருக்க
விழைகிறேனடி...

என் தலையே
போகும் சூழலிலும்
கலை என்று உன் பெயர் சொல்லி
மடிவேனடி...

Jun 21, 2010

கண்மொழி

உன் கண்ணைப் பார்த்த உடனே
என் கண்களும் போட்டனவே
வாயிக்கு கடிவாளம்!
கண்மொழி பேச
நாங்கள் இருக்க
உங்கள் வாய்மொழி எதற்கென்று...

Jun 18, 2010

கைமாறு

உறவினிலே ஒர் உன்னதமாய்
அன்பினிலே ஓர் மரகதமாய்
உன்னைப் பெற்றேன் நான்
என்னாத்தா கைமாறு செய்வேன்
என்னைப் பெற்றெடுத்த உனக்கு

சித்தெறும்பு என்னைக் கடித்தால் கூட
நாகப்பாம்பு கடித்த வலியை
நீ உணர்வாயே ஆத்தா...

கனமான கஞ்சிக்களையம்
நீ சுமந்து வந்தாலும்
கடைசிவரைப் பட்டினியாய் நீ இருப்பாயே
ஆத்தா...

பட்டணம் போய் நான் படிக்க நீ
பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா ஆத்தா?

கண் முழிச்சு நான் படிக்க
கடுங்காப்பிய போட்டு போட்டு
நீ தருவாயே ஆத்தா

என்னாத்தா கைமாறு செய்வேன்
என்னைப் பெற்றெடுத்த உனக்கு...

Jun 17, 2010

என் அருமைப் புத்தகமே

நீயே கதி என்று கிடந்தேன்
என் பள்ளிக் காலத்தில்...
உன்னைத் தொட்டால் எனக்கு
தூக்கம் தான் வருகிறது இப்பொழுது...
அறிவைப் புகட்டிய நீ
எப்படி தூக்க மாத்திரையாய்
மாறினாய்?
வழி சொல்லு எனக்கு
மீண்டும் உன்னை இரசிக்க!!!

Jun 16, 2010

நடைபாதைப் பயணம்

எத்தனை எத்தனை புதுமுகங்கள்
எத்தனை எத்தனை மாற்றங்கள்
இந்த நடை பாதைப் பயணத்திலே...

பார்த்து பல வருடம் ஆனவரை
நீங்கள் அவர் தானே என்று
ஞாபகப்படுத்தி விட்டால்
மகிழ்ச்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும்
முடியுமா?

வயதான காலத்தில்
வயிறு கழுவப் பிச்சை எடுக்கும்
சாலையோர உடன் பிறப்புக்கு
ஒரு ரூபாய் போட்டால் கூட
உள்ளார என்னவொரு திருப்தி...

தினமும் நடக்கும்
இந்த முப்பது நிமிடங்களில்
விடையும் கிடைத்துவிடும்
பல விடை தெரியாத பிரச்சனைகளுக்கும்...

நடந்து போகும் பலரையும்
நல்ல நண்பராக்கியதே இந்த
நடைபாதைப் பயணம்...

Jun 15, 2010

உனக்கு ஒன்று என்றால்?

வெள்ளி முத்தே நீ என்னுள்
பள்ளி கொண்ட
சொத்தாகிவிட்டாய்...

என் கண்மணியின் கண் இமையே
உன்னால் முடியாவிட்டால்
சொல்லிவிடு
நான் பார்த்துக்கொள்கிறேன்.

அவள் கண்ணில் விழுந்த
அணுவளவு தூசிக்கும் அளவில்லாமல்
கண்ணீர் பொங்குவது நான் அல்லவோ?

என் தங்கமகளின் தலைமயிரே
உனக்கு சாம்பிராணி காட்டி
மல்லிகையில் மணமாட வைத்தால்
எங்கிருந்தோ பேன்களை
இழுத்து வருகிறாய்.
இது தான் நீ செய்யும் நன்றியா?

பேன் அவளைக் கடிக்க அழுவது
நான் அல்லவோ?

என் கலைவாணியின் காலணியே
கடையில் சுவரில் தொங்கிய உன்னை
விலைகொடுத்து என்னவளுக்கு அர்ப்பணித்தேனே

பிஞ்சு கால்களைக் கடித்து
நஞ்சாய் இருக்கிறாயே...

நீ கடிப்பது அவளைத்தான் ஆனால்
துடிப்பது நான் அல்லவோ?

Jun 14, 2010

உனக்காக

நிலாவும் கூட
தன் முகம் மறைக்குதே
காலையில் உன்முகம்
கண்டவுடன்...

பறவைகளும் கூட
அதிகாலையில் பாட்டு பாட
ஆரம்பித்ததே உன்னை
எழுப்ப...

உன் மாவு அரிசி கோலத்தில்
மயங்கிய எறும்புகளும்
படையாய் நிற்குதே
என் கூட சேர்ந்து உனக்கு
காலை வணக்கம் சொல்ல...

உனக்காக

Jun 11, 2010

நீ செய்த தந்திரம் என்ன?

என்ன தந்திரம் செய்தாய்
என் நித்திரையிலும் உன் முகத்திரையைப்
பதிக்க...

சற்றும் எதிர்பார்க்கவில்லை இப்படி
முற்றிலும் என்னை
ஆக்கிரமிப்பாயென்று...

மனம் திருடப் படையெடுத்து
கனப்பொழுதில் இந்த
வெள்ளந்தியையும்
வெள்ளை கொடி காட்ட
வைத்துவிட்டாயே...

நீ கற்ற நேக்கு போக்குகளை
சாக்கு போக்கு சொல்லாமல்
இன்றாவது சொல்லிவிடு...

Jun 10, 2010

என் மனதில்

நித்தம் நித்தம் உன்
அழைப்புகளுக்கு ஏங்கும்
ஒரு பித்தனாகிவிட்டதை
என் சித்தம் உணர்கிறேன்.

சத்தம் இல்லாத தனிமையிலும்
சத்தமாய் ஓங்கி ஒலிப்பது
உன் குரல் மட்டும் தான் என் மனதில்.

உனக்கு ஒவ்வொரு நாளும்
விடைகொடுக்கும் போதும்
எத்தனை எத்தனை படபடப்புகள்
என் மனதில்...

உன்னுடன் பேசாத நிமிடங்களில்
ஒரு படையே என்னை தாக்கும்
அளவு வலி என் மனதில்...

Jun 9, 2010

அறுபடை வீடு

கரிய உன் கூந்தலில்
அரிய ஒரு பூ வைத்து
வாய் நிறைய ஒரு சிரிப்பு சிரித்து
என் மனதை நிறைய வைத்தாயே
பார்த்த முதல் முறையே...
அன்று தெரியவில்லை நீ
அன்பின் என் அறுபடை வீடென்று!!!

Jun 8, 2010

அகழ்

மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி
என் தூக்கத்தை பாதியாக்கி
மனசுக்குள்ள வீதி உலா செல்கிறாயே

சகலமும் உங்களுக்குத் தானென்று
சலிக்காம நீ சொல்லும் போது
உள்ளுக்குள்ள என்ன வினை நடக்குதுன்னு
எனக்கே தெரியலம்மா

மங்காத அன்பை மட்டும் பொங்கி பொங்கி
என் மேல கொட்டும் போது
மயங்கி கொஞ்சம் சாயட்டுமா
உன் மடியில

எப்ப மாமா வருவீங்கனு எப்பயுமே
நீ கேட்கும் போது
என்ன தான் சொல்றதுன்னு
எனக்கே தெரியலம்மா

கண்டிப்பா வந்து உன் கரம் பிடிச்சு
கலகலப்பா உன்னை
பார்க்கும் போது தான்
என் பாரம் கொஞ்சம் இறங்கும்மா

Jun 7, 2010

ஏன் இந்த மாற்றம்

சத்தம் இல்லாத கைப்பேசியிலும்
அடிக்கடி உன் அழைப்பு சத்தம்
கேட்பதாய் ஓர் உணர்வு...

நீ காலை வணக்கம் சொல்லவே
காலையில் சூரியனும் உதிப்பதாய்
ஓர் எண்ணல்...

ஒற்றை ரோஜாவும் உன் புன்சிரிப்பைக்
காப்பியடித்துத் தன் இதழை
விரிப்பதாய் ஒரு நம்பிக்கை...

வெளியே செல்லும் போது நீ பேசியதின்
விளைவால் தான் இந்த குயிலும் மைனாவும்
உன் குரலில் பாடுவதாய் ஒரு கணிப்பு...
உன்னால் ஏன் இந்த மாற்றம் என்னுள்?

Jun 5, 2010

காதல் ஓவியன்

கண் மூடி கண் திறக்கும் முன்
காதல் வந்தது...
வந்த காதல் வழுவடைந்தது
வங்கக்கடலில் மையங்கொள்ளும்
புயலைப் போல...
காதல் புயலில் சிக்கி இருவரும்
விடாமல் நனைகிறோம்
அன்பென்ற மழையில்...

தினமும் ஒரு மணி நேரமாவது
பேசாவிட்டால்
உலகம் இருண்டதாய்
அவள் உணர்கிறாள்

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது
நினைக்காவிட்டால்
மூளை நரம்பும் சுருண்டதாய்
நான் உணர்கிறேன்

நான் ஒரு விஞ்ஞானியாக
இருந்து இருந்தால்
காதல் அலையின் வேகம்
காணத் துடித்து இருப்பேன்

ஓவியனாய் இருப்பதால்
ஒரு சிறிய காகிதம் கிடைத்தாலும்
அவள் படம் தான் வரைகிறேன்.

Jun 4, 2010

நட்பின் பிரிவு

காலையில் கண் முழித்தவுடன்
காண ஓடி வரும்
சகா அங்கிருக்க
இங்கிருக்கேன் எட்டாத தூரத்தில்...

பாசாங்கு செய்யாத நேசங்களை
விட்டு அந்நிய தேசங்களை
ஆக்கிரமித்தது தவறு தான் தோழனே...

இங்கு இந்த விடியாத நாட்களில்
விடிந்தவுடன் நினைக்க மறக்கவில்லை
உன் நினைவலைகளை...
சீக்கிரம் வந்துவிடுகிறேன் நண்பனே
இன்னும் ஆறே மாதத்தில்...

Jun 3, 2010

சுவாசமே

காற்றில் நீ கலந்ததால்
என் சுவாசமானாய்
அன்பில் நீ விஞ்சியதால்
என் தாயிக்கு நிகரானாய்
என்னை நீ விரும்பியதால்
என்னுள் பாதியாகிறாய்
கண்ணே உன்னை கலங்க விட மாட்டேன்
உன் கண்ணுக்கு இமையாக நானிருப்பதால்...

Jun 2, 2010

பெண் கல்வி

பிஞ்சாய் இருக்கையில்
பொதியாய்ப் பஞ்சு சுமப்பவளே...
கல்ப்பனா தேவியையோ
இல்லை கரண்பேடியையோ
கனவிலும் உன் மனதில் நிறுத்தி
கல்விக்கூடம் வாருமம்மா...
இப்பொழுது வேண்டாம் இந்த
இளமையில் வேலை...

ஆண் படித்தால் குடும்பம் செழிக்கும் -ஆனால்
நீ படித்தால் ஊரே கொழிக்குமம்மா...
வறுமை பற்றி சிறுமை கொள்ளாதே
உனக்காக இலவசங்கள் ஏராளம்
இங்கு நீ படிக்க...
வா தாயே வந்து படித்து
இந்த பூமி பந்தைக் காப்பாற்று...

Jun 1, 2010

குறுந்தகவல்

நீ அனுப்பிய குறுந்தகவல்
என்னைப் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்துப் பறக்க வைக்குதடி...

ஒரு தகவலை ஓராயிரம் தடவை
படித்தாலும் மகிழ்ச்சி மட்டும்
மட்டுப்படவே மாட்டுதடி...

காலமெல்லாம் கடலையில் நாம்
இருந்தாலும் என்னை
எழுப்புவதும் தூங்க வைப்பதும்
நீ அனுப்பும் இரட்டை வார்த்தை
குறுந்தகவல்தானடி...