Jul 30, 2010

முக்கனியே

மனங்கவர்ந்த "மா" வே
உன் காதல் "பலா" தான் எனக்கு
வாழையடி வாழையாய் வாழ
"வாழை" யாய் வருவாயா?

Jul 28, 2010

நட்பின் பிரிவு - 2

கூடவே இருந்தோம்
கூடவே இருப்போமுனு
கூடியே யோசிச்சோமே பலமுறை -இப்படி
கூடவே கிடச்சதே வேலை வெவ்வேறு திசையில...

கூடவே முடியாம தவிக்கிறோமே
கூடி வரும் நம்ம திருமணத்துக்குக் கூட...

காலம் கூடி வராதா
என் நண்பன் கூட கூடி மகிழ...

Jul 26, 2010

பட்டமாகிய நான்

பட்டமாய் நான் பறந்தாலும்
கட்டுப்படுத்தும் ஆற்றல் உன் கையில்

என்னை விட்டுவிடாதே
மண்ணைத் தொட்டுவிடுவேன் ...

Jul 23, 2010

கனவிலும் நனவிலும்

கனவில்லா நாளும் இல்லை -அன்பின்
நினைவோடு வாழும் போது...

இரவினில் கனவாய்
பகலினில் நினைவாய் நீ தான்...

தேடித் தேடி வந்தாலும்
ஓடி ஓடி ஒழிந்து கொள்வாயே -ஆனால்
நாடி நாடி வருகிறாயே கனவில் மட்டும்

தூக்கத்திலும் கூடவே இருப்பேன் என்றாயே
சுவாசிக்கும் ஆக்ஸிஜனும் நீ தானா?

Jul 19, 2010

உன் வெட்கத்தை இரசிக்க பக்கத்தில் வரவா?

பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் திளைக்கிறாயே
ஓரப் பார்வையில் ஒழிந்து என்னைப் பார்க்கும் போது
தீரா ஏக்கத்தில் திக்குமுக்காடி நிற்கிறேன்

மறைந்து நீ பார்த்தாலும்
மறக்காமல் நீ அனுப்பும் புன்னகைச் செய்தி
மறை போட்டு இறுக்கியதாய்
மனதில் பதித்துவிட்டாய்

போய் வருகிறேன் என்று நான் சொல்ல நீ
சேய் போல் தவிப்பதை என்னால்
தாங்க முடியவில்லை என்
தங்க நிறத்தழகியே...

Jul 15, 2010

அந்த நாட்களை ஒருமுறை நினைக்கட்டுமா?

பாவையர்கள் பல்லாங்குழியாட
காளையர்கள் கபடியாடிய காலம்
பசுமரமாய் நிற்குதே நெஞ்சமெல்லாம்...

மங்கும் நேரத்தில் ஆடிய கள்ளன் போலீஸில்
எங்கு போய் ஒழிந்தான் இவனென்று
ஓடி ஆடித் தேடிய நினைவுகள்
ஒழியாமல் வருதே...

மங்காத்தாள் ஆடியது
எங்காத்தாளுக்கு தெரியவர
அத மறக்க அவ போட்ட சூட்ட
மேலோகம் போனாலும்
எப்படித்தான் மறப்பது...

வெட்டியாக இருக்கும் போது
போட்டி போட்டு விளையாண்ட
கிட்டி விளையாட்டு கூட
எப்படி இருக்கும் தெரியும்மா?...

விடுமுறை நாளில் குளிக்க போனால்
கண்மாயில குதியாட்டம் போட்டுத் குளித்தவனுக்கு
சவருல குளிக்கும் சந்தனக்குளியல் கூட
சாக்கடைக் குளியல் தானே...

Jul 13, 2010

கல்விக் கடை

புற்றீசலாய் கல்லூரிகள் உதிப்பதும்
பெருமை தான் -ஆனால்

கட்டமைப்பற்ற கல்லூரிகள்
கட்டுக்கடங்காமல் உதிப்பது
சிறுமை தான் பெருமை அல்லவே...

கல்லூரியைக் கடையாக்கி
கலந்தாய்வில் விற்பனையா
கல்லூரி இடங்கள்
இன்றைய கல்விமுறையில்...

ஆயிரங்கூடங்கள் கூட முளைக்கட்டும்
அத்தனையிலும் கட்டமைப்பு வசதி இருந்தால்...

அன்று படித்தவன் ஆரம்பித்தான் கல்விக்கூடம்
இன்று மக்கள் பணத்தைச் சுருட்டியவன்
ஆரம்பிக்கிறான் கல்வியென்ற வியாபாரக்கூடம்...

ஊருக்கு நூறு கல்லூரிகள்
பேருக்கு ஓரிரு தொழிற்சாலைகள் ஆங்காங்கே
இந்த நிலை எப்பொழுது மாறும் என் தாயகத்தில்?

Jul 12, 2010

துடிக்கிறேன்...

செல்லம் செல்லம் என்று
என் செவிகுளிரச் சொல்லும் போது
பள்ளத்தை நோக்கி ஓடும் நீராய்
உன் பக்கத்தில் வரத்துடிக்கிறேன்

அன்பே அன்பே என்று
ஆசையாய்ச் சொல்லும் போது
உன் அருகில் வந்து அணைக்கத் துடிக்கிறேன்

கண்ணே கண்ணே என்று
என் கண் குளிரச் சொல்லும் போது
உன் கண்ணுக்குள் உள்ள நிலவை
கலங்காமல் காக்கத் துடிக்கிறேன்

மாமா மாமா என்று
என் மனங்குளிரச் சொல்லும் போது
உன் மடியில் சாய்ந்து
மனசாரத் தூங்கத் துடிக்கிறேன்

Jul 8, 2010

அபுதாபியில் ஓர் அழகர்சாமி

படித்தது நம்நாட்டில் இலவசமாய்
பார்ப்பது வேலை
பக்கத்து நாட்டில் பரதேசியாய்...

முடிந்தவரை முயன்றும்
குடும்பத்தைக் காக்க
முடியாமல் பரதேசம் செல்பவரே
அதிகம் இல்லையா?

பத்தாம் தேதிக்குள்ள நான் அனுப்புன
பத்தாயிரம் ரூபாய
கடன் காரனுக்கு வட்டியோட
கொடுத்துட்டேன்டானு
எங்காத்தா சொல்லும் போது
ஆனந்தக் கண்ணீர் வந்து
அரை ட்ரவுசரையும் நனைச்சுடுச்சே!!!

குடும்பத்தில் உள்ளவர்கள்
படும் பாட்டைப் பார்த்து
பரதேசம் போக நினைப்பது தவறா?

தாய் மாமனுக்கு எங்கக்கா கூட
வெ.அழகர்சாமி துபாய் அபுதாபினு
போடுறதும் என் தவறா?

நேசித்தவர்களைக் காக்க
யோசித்தால் விடை
பரதேசம் தானே...

வேம்பின் மகத்துவம்

உன் நிழல் தவிர
அத்தனையும் கசப்பு தான் -ஆனால்
மனிதனுக்கோ கசப்பான இனிப்பு தான்

பட்டை முதல் கொட்டை வரை
பயனாய்ப் படுகிறாயே

அரைத்த உன் இலையை
அங்கமெல்லாம் தடவினால்
சொறியும் சிரங்கும் நெருங்குமோ?

உத்திராட்டாதி கதிர்களை ஒடுக்க
உன் சக்திக்கு நிகருமுண்டோ
இவ்வுலகில்?

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே
ஆலும் வேலும் பல்லுக்குறுதினு
சொன்னவன் நம்மவன்
இதற்கு காப்புரிமை பெறத் துடிப்பவன் அமெரிக்கனா?

Jul 6, 2010

காத்திருக்கும் காளிமுத்து

நகருக்குப் புறம் போகக் காத்திருந்தால்
புறநகரப் பேருந்து வந்துவிடும்
அவளுக்கு அகம் போகக் காத்திருக்கேன்
எப்பேருந்தென்று தெரியாமல்...

அடேய் காளி உன் சோலியைப் பார்
இல்லையென்றால் நீ காலி என்கிறாளே
அவளுடன் தாலி வரை சிந்தித்துவிட்டேன்

என்னைப் பிடிக்கும் வரை காத்திருக்கேன்
பிடிக்காது என்று மட்டும் சொல்லாதே...

Jul 5, 2010

நிகழ் கால நிம்மதி

கனவு நனவாகுமானு என்னுள்
வினவிய காலம்

கண்டிப்பாக இலக்கை அடைவாய்னு
புதுத்தெம்பைப் பாய்ச்சிய காலம்

நம்பி உழைத்தும் முடிவில்
வெம்பி அழுத காலம்

படியேறி வேலை கேட்டும்
படு முட்டாள்னு முத்திரை குத்திய காலம்

அடுத்தவன் மரத்தில் நுங்கு திருடி
மாட்டிக்கொண்டு நொங்கு வாங்கிய காலம்

இயல்பாய் இருந்தவனையும் அவள் உன்னைத்தான்
பார்கிறாள்னு என் நண்பன் ஏத்திவிட்ட காலம்

நிகழ் கால நிம்மதியே
சோகங்கள் நிறைந்த இறந்த காலத்தையும்
எண்ணி மகிழ்வது தான் அல்லவோ?

Jul 2, 2010

தோணியோட்டியின் காதல்

துடுப்பால் நான் ஓட்டும் தோணி கூட
கடுப்பில் இருக்குதே
விடுப்பில் இருக்கும் உன்னைப் பார்க்காமல்...

பட்டும் படாது பார்த்துச் செல்லும்
உன் பார்வையால்
விட்டு விட்டுத் துடிக்கும் என் இதயமே
வெடிக்கும் போல் இருக்கே...

மாலைக் கதிரவனும் மங்காமல் காத்திருக்கே
பாவாடை தாவணியில் பாவை ஒருத்தி
என் தோணியில் பயணிக்க...

Jul 1, 2010

சிலைக்கு ஒரு வலை

சிற்பம் கூட பேசும் காலம்
சொற்பம் தான்
ஆனால் அதை அழியாமல்
மனக்காட்சியகத்தில்
மறக்காமல் சேமித்துள்ளேன் ஒவ்வொரு
வார்த்தையாக...

மானே உன்னைத்தேடி அலைந்து
மாமன் என்னைத் தொலைத்துவிட்டேன்...

மயிலே உன் அழகில் மயங்கி
தயங்காமல் சொல்லிவிட்டேன்
என் விருப்பத்தை...

சரி என்று ஒரு வார்த்தை சொன்னால்
மாரி போல் குளிர்விக்க
மச்சான் நானிருக்கேன் உனக்காக...