Jun 15, 2010

உனக்கு ஒன்று என்றால்?

வெள்ளி முத்தே நீ என்னுள்
பள்ளி கொண்ட
சொத்தாகிவிட்டாய்...

என் கண்மணியின் கண் இமையே
உன்னால் முடியாவிட்டால்
சொல்லிவிடு
நான் பார்த்துக்கொள்கிறேன்.

அவள் கண்ணில் விழுந்த
அணுவளவு தூசிக்கும் அளவில்லாமல்
கண்ணீர் பொங்குவது நான் அல்லவோ?

என் தங்கமகளின் தலைமயிரே
உனக்கு சாம்பிராணி காட்டி
மல்லிகையில் மணமாட வைத்தால்
எங்கிருந்தோ பேன்களை
இழுத்து வருகிறாய்.
இது தான் நீ செய்யும் நன்றியா?

பேன் அவளைக் கடிக்க அழுவது
நான் அல்லவோ?

என் கலைவாணியின் காலணியே
கடையில் சுவரில் தொங்கிய உன்னை
விலைகொடுத்து என்னவளுக்கு அர்ப்பணித்தேனே

பிஞ்சு கால்களைக் கடித்து
நஞ்சாய் இருக்கிறாயே...

நீ கடிப்பது அவளைத்தான் ஆனால்
துடிப்பது நான் அல்லவோ?

No comments: